திருப்பூர்:
உலகளாவிய நாடுகளில் கடந்த 2020 துவக்கத்தில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியது. புதிய வைரஸ் குறித்த புரிதலின்மை, தடுப்பு மருந்து இல்லாததால், முழு ஊரடங்கு மட்டுமே தொற்று தடுப்புக்கு பிரதான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்கா, ஐரோப்பா உட்பட அனைத்து நாடுகளிலும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சர்வதேச ஆடை வர்த்தக சந்தை முடங்கியது. இதனால் கொரோனாவின் இரண்டு அலைகளும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.
வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து ஆர்டர் வருகை ரத்து, ஆடை தயாரிப்பு முடக்கம், தயாரித்த ஆடைகளை அனுப்ப முடியாமை, ஏற்கனவே தயாரித்து அனுப்பிய ஆடைக்கான தொகை பெறுவதில் காலதாமதம் என அடுக்கடுக்காக பிரச்சினைகள் உருவாகின.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் நிதி நிலை மோசமடைந்துள்ளது. அனைத்து நாடுகளிலும், தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்தியா உட்பட உலக நாடுகளில் ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் குறித்த புரிதல் மேலோங்கியுள்ளது. தடுப்பூசிகள் பேராயுதமாக உள்ளன. தொற்று பாதித்தோர் விரைந்து குணமாகின்றனர். முதல் இரண்டு அலைகளின்போது ஏற்பட்ட அச்சநிலை இப்போது விலகிவிட்டது.
பிரிட்டன் போன்ற வெளிநாடுகள் அறிவித்த ஊரடங்கை வாபஸ் பெற்றுள்ளன. சர்வதேச ஆயத்த ஆடை வர்த்தக சந்தை, வழக்கம்போல் இயங்கி வருகிறது. மக்கள் ஆயத்த ஆடை ரகங்களை ஆர்வமுடன் வாங்குகின்றனர். அதனால் உலக அளவில் ஆயத்த ஆடை தேவை அதிகரித்துள்ளது.
நமது நாட்டிலும் முழு ஊரடங்கிற்கான வாய்ப்பு இல்லை. அமெரிக்க டாலர், பிரிட்டன் பவுன்ட், ஐரோப்பிய யூரோ உள்ளிட்ட அன்னிய பண மதிப்புகளும் ஏற்றுமதிக்கு சாதகமான வகையில் நிலையாக உள்ளன.
பஞ்சு, நூல் விலை உயர்வு, ஜாப் ஒர்க் கட்டணங்கள் அதிகரிப்பு என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வெளிநாடுகளில் ஜவுளி வர்த்தகம் வழக்கம்போல் நடைபெறுவது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு ஆறுதல் தருகிறது. வெளிநாட்டு வர்த்தகரிடமிருந்து ஆர்டர் பெற்று ஆடை தயாரிப்பதில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
திருப்பூர் ஆர்பிட்ரேசன் கவுன்சில் நிர்வாக குழு கூட்டம் ‘சைமா’ அரங்கில் கூடியது. கவுன்சில் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
அதில் அவிநாசியை சேர்ந்த ஒரு ஏற்றுமதி நிறுவனம் 2021ல் ரூ.32 லட்சம் மதிப்பிலான ஆடைகளை, அமெரிக்க வர்த்தகருக்கு அனுப்பியுள்ளது.
அதற்கான தொகையை வர்த்தகர் வழங்கும் முன் சரக்கு கையாளும் நிறுவனம், அமெரிக்க வர்த்தகருக்கு ஆடைகளை வழங்கியுள்ளது. ஆடைகளை பெற்று கொண்ட வர்த்தகர் தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்.
சரக்கு கையாளும் நிறுவனம் ரூ. 17 லட்சத்தை ஆடை ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. மீதம் 15 லட்சத்தை பெற்று தரக்கேட்டு ஆர்பிட்ரேசனில், ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் புகார் அளித்தனர்.
ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி கூறுகையில்:
அவிநாசியை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் அளித்த புகார் அடிப்படையில், அமெரிக்க வர்த்தகர் மற்றும் சரக்கு கையாளும் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சிறந்த வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்து, ஆடை தயாரிப்பில் ஈடுபட வேண்டும். அதேபோல் சரக்குகளை கையாளும் நிறுவனங்களின் நம்பகத் தன்மை குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றனர்.