திருப்பூர்:
திருப்பூர் பழைய பஸ் நிலையம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பொலிவுடன் கட்டப்பட்டுள்ளது. அதன் மையப்பகுதியில் வணிக வளாகம், தெற்குப்பகுதியில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் பஸ் நிலையத்தை அழகுபடுத்தும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அவ்வகையில் ‘நிப்ட்--டீ’ கல்லூரி ஆயத்த ஆடை வடிவமைப்பு மாணவர்களை கொண்டு பஸ் நிலைய சுவரில் கண்கவர் ஓவியம் தீட்டுகின்றனர்.
கல்லூரியின் முதன்மை டிசைனர் பூபதி விஜய் தலைமையில் மாணவர்கள் சஞ்சய்குமார், வசந்த்குமார், நித்தீஷ், கவுதம், கவின், சூர்யா, சுகந்த், எழில் உள்ளிட்டோர் கடந்த 1-ந்தேதி முதல் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஆரஞ்சு என 14 வண்ணங்களை கொண்டு, அனைவரையும் திரும்பி பார்க்க செய்யும் வகையில் பளிச்சிடும் கிராபிட்டி ஆர்ட் வரைகின்றனர். பின்னலாடை தொழில் துறையே திருப்பூருக்கு ஏற்றம் தந்துள்ளது.
இதை பறைசாற்றும்வகையில் பருத்தி, ஆடை, துணி, ஊசி, தையல் எந்திரம், கத்திரி, ஹேங்கர், தொப்பி போன்ற பின்னலாடை உற்பத்தி சார்ந்த பொருட்கள், உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை வர்த்தகத்தை பிரதிபலிக்கும் வகையிலான குறியீட்டு உருவங்களை தீட்டியுள்ளனர்.
கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியும் வகையில் உருவங்களை ஒன்றன் மீது ஒன்றாக கலவை ஓவியமாக வரைந்துள்ளனர். பஸ் நிலையத்திற்கு வந்துசெல்லும் பயணிகள், திருப்பூரின் பெருமை கூறும் இந்த சுவர் ஓவியம் முன்புறம் நின்று செல்பி எடுத்துக்கொள்ள முடியும். பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது பலராலும் இந்த சுவர் செல்பி கார்னராக பயன்பட வாய்ப்பு உள்ளது.
இரண்டாம் கட்டமாக பஸ் நிலையம் நுழைவாயில் பகுதியில் திருப்பூரின் பின்னலாடை தொழில் வரலாற்றை விளக்கும் வகையிலான சுவர் ஓவியம் வரைய திட்டமிட்டுள்ளனர். மிக நுட்பமாக ஓவியம் தீட்டும் மாணவர்களை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.