திருப்பூர்:
திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் ஸ்ரீசித்திர குப்தர் கோவில் பிரசித்தி பெற்றது. தமிழகத்திலேயே காஞ்சி புரத்துக்கு அடுத்தபடியாக திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் சித்திரகுப்தர் அருள்பாலிக்கிறார்.
சித்ரா பவுர்ணமி நாளில் விழா எடுத்து கொண்டாடுகின்றனர். நாடி வரும் பக்தருக்கு வேண்டியது கிட்டுவதால் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.கடந்த 100 ஆண்டுகளாக வழிபடப்படும் சித்திரகுப்தர் கோவிலில் 90ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா வருகிற 16-ந்தேதி நடக்கிறது.
வருகிற 15-ந்தேதி மாலை 5 மணிக்கு, மங்கள இசையுடன் சித்திரகுப்தர் உற்சவர் திருவீதியுலா, பால்குடம் ஊர்வலம், அபிஷேக பூஜைகள் நடக்கும். வருகிற 16-ந்தேதி காலை 5 மணிக்கு, ஸ்ரீகணபதி ஹோமம், சித்திரகுப்தர் சிறப்பு பூஜை, யாகபூஜை, பூர்ணாஹூதி வழி-பாடுகள் நடக்கிறது.
காலை 10:30 மணிக்கு சித்திரகுப்தருக்கு 16 வகையான திரவியங்களால், அபிஷேகம் மற்றும் புனித கலசநீர் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. காலை, 11:40 மணிக்கு, கூனம்பட்டி ஆதீனம், நடராஜ சுவாமி அருளாசி வழங்குகிறார். தொடர்ந்து 12 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
சித்திரை மாதம் பிறந்தவர்கள், ஸ்ரீசித்திர குப்தர் கோவிலில், பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். சித்திர குப்தரை வழிபட்டால், கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐ தீகம். கொரோனா ஊரடங்கால், கடந்த 2 ஆண்டுகளாக, சித்ரா பவுர்ணமி விழா எளிமையாக நடந்தது. இந்தாண்டு, கோலாகலமாக கொண்டாட சித்திர குப்தர் ஆலய விழாக் குழு, மாதபவுர்ணமி பூஜை குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.