திருப்பூர்:
பவர்டேபிள் சங்கத்துடன் தையல் கட்டண உயர்வுக்கான 5-வது சுற்று பேச்சுவார்த்தையை நாளை 7-ந்தேதி நடத்த சைமா சங்க செயற்குழு முடிவு செய்துள்ளது. திருப்பூர் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க செயற்குழு கூடடம் ஹார்வி ரோடு சிட்கோ வளாகத்தில் உள்ள சங்க அரங்கில் நடைபெற்றது.
சங்க துணை தலைவர் கோவிந்தப்பன் தலைமை வகித்தார். பொதுசெயலாளர் பொன்னுச்சாமி, பொருளாளர் ராமசாமி, இணைசெயலாளர் சசிஅகர்வால் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்துடனான தையல் கட்டண உயர்வு பேச்சுவார்த்தை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சதவீத அடிப்படையில் ஆடை , தையல் கட்டண உயர்வு நிர்ணயிப்பதில் முரண்பாடுகள் ஏற்படுகின்றன.எனவே பனியன் , ஜட்டி என ரகம் வாரியாக கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என பெரும்பான்மையினர் வலியுறுத்தினர்.
பின்னலாடைகளுக்கு ரகம் வாரியாக தையல் கட்டண உயர்வு நிர்ணயிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதற்காக சைமா சார்பில் ஐவர் குழு அமைக்கப்படும். நாளை 7-ந்தேதி மாலை 5 மணிக்கு பவர்டேபிள் உரிமையாளர் சங்கத்துடன் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.