கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு

ஏற்கனவே பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள துணி உற்பத்தி செய்து விற்பனை யாகாமல் குடோனில் தேக்கம் அடைந்துள்ளது.

பல்லடம்:

கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் வருகிற 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் விசைத்தறி தொழில் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து இருப்பதால் உடனடியாக 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 

இதுகுறித்து தமிழ்நாடு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க பல்லடம் ஒருங்கிணைப் பாளர் கரைப்புதூர் சக்தி வேல் கூறியதாவது:

திருப்பூர்,கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற் றின் மூலம் தினமும் ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

கொரோனா 2ம் அலையின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டு விசைத்தறி தொழில் நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது நூல் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பல்லடம் ரகத்திற்கு 20 சதவீதமும்,சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதமும் கூலி உயர்வு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளி யிடப்பட்டது. 

கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளி நாடு மற்றும் நாடு முழுவதும் காடா துணி விற்பனை பாதிப்படைந்துள்ளது. மேலும் வட மாநிலங்களில் சாய தொழிற்சாலைகளில் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. 

பஞ்சு உள்ளிட்ட மூலப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதால் உள்நாட்டில் அவற்றின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் உள்நாட்டில் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகையின் போது 32 வார்ப்பு நூல் ரூ.275க்கு விற்பனையானது.

தற்போது ரூ.320க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் துணியின் விற்பனை விலை உயரவில்லை. அதிக விலைக்கு நூலை வாங்கி துணி உற்பத்தி செய்து அசல் விலையை காட்டிலும் நஷ்டத்திற்கு துணி விற்பனை செய்ய முடியாது என்பதால் துணி உற்பத்தியை ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைத்து கொண்டனர்.

ஏற்கனவே பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள துணி உற்பத்தி செய்து விற்பனையாகாமல் குடோனில் தேக்கம் அடைந்துள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வட மாநிலங்களில் தொழிலாளர்களின் தினசரி கூலி குறைவு. மேலும் அந்த பகுதியில் விசைத்தறி தொழில் தொடங்க மற்றும் விரிவாக்கத்திற்கு 40 சதவீதம் அரசு மானியம் அளிக்கிறது.

அங்கு மகளிர் தொழில் முனைவோருக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3க்கும், பொது பிரிவினருக்கு ரூ.4.70க்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. அதே சமயம் தமிழகத்தில் தொழில் பயன்பாட்டு மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.7.50 ஆக உள்ளது. 

தமிழக அரசு வட மாநிலங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி கள ஆய்வு நடத்தி தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் விசைத்தறி துணி உற்பத்தி தொழில் தொடங்க தமிழக விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அந்த மாநில அரசுகள் அழைப்பு விடுத்து வருகிறது. 

மானியம், மின் கட்டண சலுகை, நிலம் ஒதுக்கீடு போன்ற சலுகைகள் வழங்க தயாராக இருப்பதாகவும். மேலும் தொழில் துறையில் மிகவும் பின்தங்கிய பகுதியில் தொழில் தொடங்கினால் செலுத்தப்படும் மாநில ஜி.எஸ்.டி. வரியில் 80 சதவீதம் திரும்ப வழங்குவதாக தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வட மாநிலங்களில் தொழிற்கூடங்களை நிறுவ ஆலோசித்து வருகின்றனர். விசைத்தறி துணி உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான பஞ்சுவை பங்கு சந்தை பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். இல்லை என்றால் சர்வதேச அளவில் இந்தியாவில் ஜவுளி உற்பத்தி தொழில் காணாமல் போகும் சூழ்நிலை உருவாகும்.

விசைத் தறி ஜவுளிகளுக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்வு செய்யாமல் நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உதவிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜன், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், செந்தில்பாலாஜி, பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு தமிழ்நாடு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

விசைத்தறி தொழில் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து நலிவடைந்து வருவதால் தொழில் நிலைமை சீராகும் வரை உடனடியாக பல்லடம் ரகத்திற்கு 10 சதவீதம் கூலி உயர்வு வழங்க தயாராகவுள்ளோம். விசைத்தறி தொழில் துறை சீரானவுடன் படிப்படியாக மேலும் 10 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தனர்.