திருப்பூர்:
சர்வதேச அளவில் குறைந்த விலைக்கு ஆடை ரகங்களை சந்தைப்படுத்தும் போட்டி நாடுகளால் திருப்பூர் உட்பட நாடு முழுவதும் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:-
மத்திய ஜவுளித்துறை செயலர் உபேந்திர பிரசாத் சிங், ‘இந்திய ஜவுளித்துறைக்கு வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் முக்கியமானதாக உள்ளன.
‘பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சில் முன்னேற்றம் தெரிகிறது.
இந்நாடுகளுடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது’ என நம்பிக்கை தெரிவித்து உள்ளார். வர்த்தக ஒப்பந்தம் மூலம் சர்வதேச சந்தையில் போட்டி களத்தில் சமநிலை உருவாகும். போட்டி நாடுகளை எதிர்கொள்வது எளிது.
புதிய சந்தையை வசப்படுத்துவதால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆண்டு முழுவதும் ஆடை தயாரிப்புக்கான வாய்ப்பு கிடைக்கும், ஏற்றுமதி வர்த்தகம் பெருகும்.
இவ்வாறு அவர் கூறினார்.