திருப்பூர்:
திருப்பூரில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்(சைமா) பனியன் தையல் நிலைய உரிமையாளர் சங்கம் (பவர்டேபிள் சங்கம்) இடையே தையல் கட்டண உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இரு தரப்பினரும் கடந்த டிசம்பர் 23-ந் தேதி முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
தங்களுக்குள் ஆலோசனை நடத்திவிட்டு அதன்பின் 2-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கடந்த 27-ந்தேதி செயற்குழுவை கூட்டிய பவர்டேபிள் சங்கம் முதல் ஆண்டில் 30 சதவீதமும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 15 சதவீதமும் என மொத்தம் 75 சதவீத கட்டண உயர்வு கேட்பது என முடிவு செய்தது. எதிர்பார்க்கும் கட்டண உயர்வு விவரங்களை, சைமாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சைமா நிர்வாகிகள் இன்னும் தங்களுக்குள் ஆலோசனை நடத்தவில்லை. அதனால் 2-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த வாரம் இறுதிக்குள் தங்களுக்குள் பேசி முடிவெடுத்துவிட்டு பவர்டேபிள் சங்கத்தை நேரடி பேச்சுக்கு அழைக்க சைமா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பவர்டேபிள் உரிமையாளர்கள் கூறுகையில்:
நூல், தொழிலாளர் சம்பளம் என தையல் செலவினங்கள் அனைத்தும் உயர்ந்துள்ளன. கடந்த 2016ல் போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகி ஓராண்டுக்கு மேலாகிறது.
கடந்த 2021 ஆகஸ்டு மாதம் போடப்பட்ட இடைக்கால ஒப்பந்தப்படி ஆடை டஜனுக்கு ரூ.6 கட்டண உயர்வு கிடைத்து வருகிறது. சைமா சங்கம் பேச்சுவார்த்தையை விரைந்து நடத்தி பவர்டேபிள் நிறுவனங்களுக்கு கட்டண உயர்வு பெற்றுத்தர வேண்டும் என்றனர்.