கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

அவினாசி பேரூராட்சி செயல் அலுவலர் மீது புகார் தெரிவித்த பெண் ஊழியர் திடீர் இடமாற்றம்

புகார் வழங்கிய பெண் ஊழியர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் இருந்துள்ளார்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்தவர் ஆனந்தன். நேற்று முன்தினம் திடீரென ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். இது பேரூராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி அவிநாசி மக்கள் மத்தியிலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் ஒரு பெண் ஊழியர், செயல் அலுவலர் ஆனந்தன் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பேரூராட்சிகளின் இயக்குனரிடம் வழங்கிய புகாரின் அடிப்படையில் ஆனந்தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புகார் வழங்கிய பெண் ஊழியர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பணியில் இருந்துள்ளார். தனது செல்போனுக்கு செயல் அலுவலரின் செல்போனில் இருந்து வந்ததாக சில ‘வாட்ஸ் ஆப்’ பதிவுகளை ஆதாரமாக காட்டி, இத்தகைய நடவடிக்கையை எடுக்க வைத்ததாக கூறப்படுகிறது. 

ஆனால் நடவடிக்கைக்கு உள்ளான செயல் அலுவலர் மீது இதுவரை எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை. பேரூராட்சியில் இதற்கு முன் சுகாதாரப்பிரிவில் பணிபுரிந்த ஒரு அலுவலரின் தூண்டுதல் பேரிலும், அவரது வழிகாட்டுதல் அடிப்படையிலும் தான் திட்டமிட்டு செயல் அலுவலரை சிக்க வைத்துள்ளனர் என பேரூராட்சி வட்டாரத்தில் பேச்சு எழுகிறது.

இந்த விவகாரத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மட்டத்திலான அதிகாரிகள் துறை ரீதியான விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்தநிலையில் செயல் அலுவலர் ஆனந்தன் மீது புகார் தெரிவித்த பெண் ஊழியர் திடீரென கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.