திருப்பூர்:
பிறந்தது முதல் இரண்டு வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் வழக்கமான தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டு விட்டதா? என்பதை கண்காணிக்க மாவட்ட அளவில் குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதம் தடுப்பு, புற்றுநோய், காசநோய், கல்லீரல் உள்ளிட்ட 11 வகையாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பிறந்தது முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள், அனைத்து குழந்தைகளுக்கும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதா, 2 ஆண்டுகளாக கொரோனா காலகட்டம் என்பதால் தவிர்க்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட உள்ளது.
இக்குழுவினர் வீடு, வீடாக சென்று, மத்திய அரசின் ‘இந்திர தனுஷ்’ திட்டத்தின் கீழ் 2 வயதான குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டதா? என கண்காணிப்பர். தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கு உரிய தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.