கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

நூல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்- அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க சைமா அழைப்பு

நூல் விலை உயர்வு குறித்து கடந்த 8-ந் தேதி கலந்தாலோசனை கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலக அரங்கில் நடைபெற்றது.

மாலை மலர்

திருப்பூர்:

நூல் விலை உயர்வை கண்டித்து நடக்கும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று சைமா அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க தலைவர் சைமா ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நூல் விலை உயர்வு குறித்து கடந்த 8-ந் தேதி கலந்தாலோசனை கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலக அரங்கில் நடைபெற்றது.

திருப்பூர் தொகுதி சுப்பராயன் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் கோவை எம்.பி. நடராஜன், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூரின் அனைத்து பின்னலாடை தொழில் அமைப்புகள் மற்றும் தெழிற்சங்கங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த குறிப்பாக ஈரோடு, கோவை, கரூர், மதுரை போன்ற பகுதிகளில் இருந்து ஜவுளி அமைப்பை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும். பருத்தியை யூகபேர பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். மே மாதத்தில் நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டது. 

அந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று நூற்பாலைகளுக்கு கடிதம் எழுதுவது, பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து வருகிற 16, 17-ந்தேதி பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் விசைத்தறி கூடங்கள் வேலைநிறுத்தம் செய்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானங்களை சைமா, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், நிட்மா, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், டெக்மா, டீமா ஆகிய திருப்பூர் பின்னலாடை மற்றும் ஜவுளி சங்கங்கள் ஆதரித்துள்ளன. 

பின்னலாடை தொழிலை மீட்டெடுக்கும் வகையில் நடத்தப்படும் இந்த போராட்டத்தில் உறுப்பினர்கள் முழுமையாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.