திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ப.விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் குளிர்பானங்கள், சாக்லேட் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கடைகயள், தாராபுரம், பல்லடம், அவிநாசி, வெள்ளக்கோவில் என மாவட்டம் முழுவதும் உள்ள 228 கடைகளில் பிப்ரவரி 23-ந்தேதி முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரையில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 715 லிட்டர் குளிர்பானங்களைப் பறிமுதல் செய்து அழித்தனர். இதன் மதிப்பு ரூ.3.5 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோடைகாலம் தொடங்கியுள்ளதால் நீண்ட காலம் பயன்படுத்தும் வகையிலான குளிர்பானங்களை விற்பனை செய்ய வேண்டும். மேலும், குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லேட்டுகள் அதிக நிறம் சேர்த்ததையும், லேபிள் விவரம் இல்லாததையும் விற்பனை செய்யக் கூடாது என்று கடை உரிமையாளர்களை அறிவுறுத்தியுள்ளனர்.