திருப்பூர்:
திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்திய போதை ஆசாமி ஒருவர் போதையில் தகராறு செய்துள்ளார்.
இதை அப்பகுதி மக்கள் தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தனது நண்பர்கள் 5 பேரை அழைத்து வந்ததுடன், கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் செல்வராம், மணிகண்டன், பாபு, சுந்தரம், காளிமுத்து ஆகியோர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே தாக்குதலில் ஈடுபட்டு தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி புதுப்பாளையம் மக்கள் காங்கேயம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதைத்தொடர்ந்து அங்கு வந்த நல்லூர் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் பொதுமக்களை தாக்கியது தொடர்பாக பெரம்பலூரை சேர்ந்த பிரசாந்த் (வயது 22), பிரதீப்(22), மூணாறை சேர்ந்த ராஜேஷ்(24), சேலத்தை சேர்ந்த ஹானஸ்ட் ராஜ் (27) ஆகிய 4பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.