மஞ்சள், குங்குமம் , திருநீறு வைத்து வழிபாடு நடத்தப்பட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில்- குங்குமம், மஞ்சள், திருநீறு வைத்து வழிபாடு

கண்ணாடிப்பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தேர்வு முறை சற்று வித்தியாசமானது.

மாலை மலர்

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் உள்ளது. மற்ற எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாக சிவன்மலை முருகன் கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். பின்னர் அந்த பொருளை கோவில் மூலவர் அறைக்கு முன்பாக கற்தூணில் உள்ள கண்ணாடி பேழைக்குள் வைத்து பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள்.

இந்த கண்ணாடிப்பெட்டிக்குள் என்ன பொருளை வைக்க வேண்டும் என்ற தேர்வு முறை சற்று வித்தியாசமானது. சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து, இன்ன பொருளை வைத்துப்பூஜை செய்ய உத்தரவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் இது ஆண்டவன் உத்தரவு என்று அழைக்கப்படுகிறது.

இப்படி கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்று எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக் காட்டும் வரையில் பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு, கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் என்பது இப்பகுதிகளில் உள்ள பக்தர்களின் நம்பிக்கை. கடந்த ஜனவரி 29-ந் தேதி சிவலிங்கம் வைத்து பூஜை செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை வரை கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோவை  சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்ற பெண் பக்தரின் கனவில் வந்ததாக கூறியதையடுத்து குங்குமம், மஞ்சள், திருநீறு வைத்து சிறப்பு வழிபாடு  நடத்தப்பட்டது. பின்னர் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் நீக்கப்பட்டு, தற்போது குங்குமம், மஞ்சள், திருநீறு பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவாச்சாரியார்கள் கூறும் போது, பல வருடங்களாக  நடைபெறாத மங்கள காரியங்கள் மளமளவென நடைபெறும். மேலும் ஆன்மீக சக்தியும் அதிகரித்து தெய்வங்களின் பேரருளும் கிடைத்து  சுபிட்சநிலை நிலவும் என்றனர்.