கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

உடுமலை சந்தையில் களை கட்டிய கட்டுச்சேவல் விற்பனை

சண்டைக்கு வளர்ப்பவர்கள் சந்தை வளாகத்திலேயே சேவல்களை மோத விட்டு அவற்றின் தரத்திற்கு ஏற்ப ஏலம் கூறினர்.

மாலை மலர்

உடுமலை:

உடுமலை சந்தையில் கட்டுச்சேவல் விற்பனை களைகட்டியது. உடுமலை நகராட்சி வாரச்சந்தையில் வாரம்தோறும் திங்கட்கிழமை, காலை 6:30 முதல் 9:30 வரை, ஆடு, கோழி சந்தை நடக்கிறது. சந்தை கூடும் நாட்களில் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்து ஆடு, கோழிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதமாக நாட்டுக்கோழி, ஆடு வரத்து குறைந்த நிலையில் பருவமழை அதிகரிப்பு, விழா காலங்கள் மற்றும் இறைச்சி விலை அதிகரிப்பு காரணமாக உடுமலை சந்தைக்கு இக்கோழி வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதிலும் கட்டுச்சேவல் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதால் சேவல் விற்பனை அதிகரித்தது. 

சண்டைக்கு வளர்ப்பவர்கள் சந்தை வளாகத்திலேயே சேவல்களை மோத விட்டு அவற்றின் தரத்திற்கு ஏற்ப ஏலம் கூறினர். இதனால் சேவல்கள் 2 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. மேலும், நூற்றுக்கணக்கான நாட்டுக்கோழிகளும் விற்பனைக்கு வந்தன. நாட்டுக்கோழிகள் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை ஏலம் போனது.

உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ளதால் திருப்பூர் மாட்டுச்சந்தை களை கட்ட தொடங்கியுள்ளது. திருப்பூர் கோவில்வழியை அடுத்த அமராவதிபாளையத்தில் கூடிய சந்தைக்கு வழக்கத்தை விட அதிகமான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

மைதான நுழைவு வாயிலை கடந்து செல்ல வழியின்றி சத்யா காலனி முதல் சவுடேஸ்வரி அம்மன் கோவில் வரை ஒரு கி.மீ., தூரத்துக்கு மாடுகளுடன் வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் ஒரு மணி நேரம் வரை காத்திருந்தன.

சந்தைக்குள் வந்த மாடுகளை வாங்க மனமில்லாத வியாபாரிகள், ஆட்டோக்கள் நிற்குமிடத்துக்கே சென்று கன்றுகுட்டிகளை விலை பேசினர். பெரிய ரக மாடுகளை வாங்க கன்றுகுட்டிகளை வாங்க பலர் போட்டி போட்டனர். கடந்த ஒரு மாதமாக சந்தையில் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், தேர்தல் முடிந்து கையோடு விற்பனை இயல்பாகியுள்ளது. ரூ.1.30 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.