திருப்பூர்:
உற்பத்தியை பெருக்கவும், பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும் விவசாயிகள் பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்களை பயன்படுத்துகின்றனர். பல்லடம் அருகேயுள்ள நொச்சிபாளையத்தை சேர்ந்தவர் திருமுத்துசெல்வன் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அவர் இயற்கை உரங்களையும் தானே சொந்தமாக தயாரித்தும் வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
இலை, தழை, சாணம் ஆகியவற்றை பயன்படுத்தி இயற்கை உரத்தை தயாரித்து வருகிறேன். இயற்கை விவசாயத்தால் கூடுதல் வேலைப்பளு என்றாலும், ரசாயனங்களுக்கு ஏற்படும் செலவுகள் குறைகின்றன.
மேலும், இயற்கை உரத்தை பயன்படுத்தி விளைவிக்கப்படும் பொருட்கள் தரமுள்ளதாகவும், பயிர்கள், பூச்சி தாக்குதலுக்கு ஆளாகாமலும் இருக்கின்றன. நாட்டு ரக காய்கறிகள், பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்கிறேன்.
உற்பத்தி அதிகம் கிடைக்கும் என்ற நோக்கில், விவசாயிகள் பலர் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து தமது நிலத்தை தாமே மலடாக்கி கொள்கின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகளால் மண், தனது இயற்கையான வளத்தை இழக்கிறது.
இயற்கை நமக்கு அளித்த நீர், நிலம், காற்று ஆகியன மாசுபடாமல் இருந்தால் மட்டுமே, அனைத்து உயிர்களும் உயிர் வாழ முடியும். நாட்டு ரகங்களை காட்டிலும், கலப்பின காய்கறிகள், பயிர்களில் அதிக உற்பத்தி கிடைக்கும்.இப்படியிருக்க, கலப்பின காய்கறிகள் சாகுபடியில்தான் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுவர்.
காய்கறிகள் பளபளப்பாக இருந்தால் மட்டுமே அவை தரமானவை என்று மக்களும் நினைக்கின்றனர். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளில் உள்ள சத்துக்கள் யாருக்கும் தெரிவதில்லை.
நிறைய சிரமங்களுக்கு மத்தியில், இயற்கை முறையில் காய்கறிகளை விளைவித்தாலும் உரிய விலை கிடைப்பதில்லை. இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த மக்கள் பெருமளவில் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.