உடுமலை:
குருமலை மலைவாழ் குடியிருப்பில், அனைவருக்கும், வன உரிமைச்சான்று வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். தளி பேரூராட்சி துணைத்தலைவர் செல்வன் மற்றும் குருமலை மக்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஆனைமலை புலிகள் காப்பகம் குருமலை மலைவாழ் குடியிருப்பில் வசிக்கும் 73 பேருக்கு வன உரிமைச்சான்று, பட்டா வழங்க கலெக்டர் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த பயனாளிகள் பட்டியலில் 5 பேருக்கு மட்டும் பட்டா வழங்க வனத்துறையினர் கையெழுத்திடவில்லை. வன உரிமை சட்டப்படி ஒரு நபருக்கு 9 ஏக்கர் 88 சென்ட் வரை அனுபவ உரிமை வழங்கலாம். ஆனால் 15 சென்ட் நிலம் உள்ளது என 5 பேருக்கு பட்டா வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
மலைவாழ் கிராம பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்பவர்கள் என 5 பேரை பட்டியலிட்டு, பட்டா வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து விடுபட்ட 5 பேருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.