உடுமலை:
ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து உடுமலை பகுதி பிரிக்கப்பட்டு 2001ல் பிரிவு அலுவலகமாக தொடங்கப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் 1.2 பணியிடம் உருவாக்கப்பட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் 2009ல் உருவாக்கியபோது தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துடன் உடுமலை பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டது. பல்வேறு பணிகளுக்காக உடுமலையிலிருந்து தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று திரும்ப வேண்டிய நிலை அனைத்து தரப்பினருக்கும் இருந்து வந்தது.
எனவே உடுமலை பிரிவு அலுவலகத்தை தரம் உயர்த்தி நிரந்தர கட்டிடம் கட்ட நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. அதற்கேற்ப வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த பிரிவு அலுவலகத்திற்கு உடுமலை அரசு கலைக்கல்லூரி அருகே நிரந்தர கட்டிடம் கட்டப்பட்டு 2018ல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது .
அலுவலகத்தை தரம் உயர்த்தும் கோரிக்கை மட்டும் கிடப்பில் போடப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டத்துடன் உடுமலை தாலுகா சேர்க்கப்பட்ட போது இங்குள்ள அரசு அலுவலகங்கள் தரம் உயர்த்தப்படும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அதிருப்தில் இருந்தனர்.
தற்போது உடுமலை அலுவலகத்தில் மாதம் தோறும் 800 வாகனங்கள் வரை சராசரியாக பதிவு செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு ரூ. 25 கோடி வரை வருவாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதில் 80 சதவீத வருவாய் பெறப்பட்டு வருகிறது.
உடுமலை-மடத்துக்குளம் தாலுகாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் பல்வேறு வரியினங்கள் செலுத்தும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு வாகனங்கள் உள்ளன.
ஆண்டுதோறும் வாகனங்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்து வருகிறது. அலுவலகத்தில் நவீன ஒடுதளமும் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
எனவே வட்டார போக்குவரத்து அலுவலகம் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உடுமலை பிரிவு அலுவலகத்தை வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
உடனடியாக இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் தகவல் பலகை வைக்கவும் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இதையடுத்து உடுமலை அலுவலகத்தில் புதிய தகவல் பலகை வைக்கப்பட்டது.
இதேபோல் வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட 9 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அலுவலர்கள். பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதனால் சுற்றுலா பர்மிட் உட்பட பல்வேறு பணிகளுக்காக தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உடுமலையை சேர்ந்த வாகன ஓட்டிகள் செல்வது தவிர்க்கப்படும்.
உடனடியாக ஆர் .டி. ஓ.பணியிடத்திற்கு ஏற்ப உடுமலை அலுவலகத்தின் சர்வர் உட்பட தொழில் நுட்பங்களை மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீண்டகால கோரிக்கை நிறைவேறும் வகையில் அரசு உத்தரவு வெளியாகி உடனடியாக பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் உடுமலை பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.