திருப்பூர்:
ஆண்டுதோறும் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 2022 ம் ஆண்டான இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 1,500 க்கும் மேற்பட்ட புனித ஹஜ் பயணிகள் கேரளா கொச்சி விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
புனித ஹஜ் பயணம் செல்கையில், பின்பற்ற வேண்டிய பல்வேறு நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் பற்றி விளக்கம் அளிக்க தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சார்பில் ஹாஜிகளுக்கான புத்துணர்வு பயிற்சி முகாம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுடன் திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் சேவை மையம் இணைந்து திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டத்திலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 150 க்கும் மேற்பட்ட ஹாஜிகளுக்கான புத்துணர்வு பயிற்சி முகாம் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள காதர் சலீமா திருமண மண்டபத்தில் நடந்தது.
கருத்தரங்கில் திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் சேவை மையம் தலைவர் முஹம்மது ஈசாக் தலைமை தாங்கினார். செயலாளர் சையத் ஆதில் வரவேற்றார். கருத்தரங்கில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு நிர்வாகிகள் ஜாஹீருதீன், பயிற்சியாளர் ஹபிபுல்லா ரூமி ஆகியோர் ஹஜ் பயணிகளுக்கு வீட்டில் இருந்து புறப்படுவது, கொச்சியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதீனா விமான நிலையம் அடைவது, சவுதியில் உள்ள மெக்கா, மதினா, மினா ஆகிய இடங்களில் தங்குவது, உம்ரா, ஹஜ் விளக்கம், மதீனாவிலிருந்து மெக்கா செல்வது, பின்னர் நாடு திரும்புவது உள்பட பயண நடைமுறைகள்,
பயண ஆவணங்களின் முக்கியத்துவம், சவுதி அரேபியாவில் இந்திய துணை தூதரகத்தால் புனித பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பயணத்தின்போது வெவ்வேறு நிலைகளில் உள்ள சட்டத்திட்டங்கள், சவுதி பயண ஏற்பாட்டாளர்களின் பங்கு மற்றும் சவுதி அரசின் கட்டுப்பாடுகள் முதலியன குறித்து புனித பயணிகளுக்கு விளக்கம் அளித்தனர். தொடர்ந்து ஹஜ் பயணிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
பின்னர் ஹஜ் குறித்து அக்பர் அலி, உம்ரா குறித்து ஈரோடு சலீம், மதினா ஜியாரத் குறித்து திருப்பூர் ஜுபேர் ஆகியோர் விளக்கி பேசினார்கள். தொடர்ந்து ஹாஜிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட ஹாஜிகள் சேவை மைய உபதலைவர் ஹாரூன் ரஷீத், சுக்கூர், ஹபிபுல்லா, ஆரிப் மற்றும் நிர்வாகிகள் சைபுதீன், சஃபியுல்லா, அக்பர் அலி, பள்ளப்பட்டி அன்வர் அலி, தாராபுரம் முகம்மது ரியாஸ், சாதிக், அப்துல்லா ரஹ்மத்துல்லா, பள்ளப்பட்டி அன்வர் அலி, மங்கலம் முஸ்தபா ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில் பொருளாளர் எஸ்.எஸ்.கலீல் நன்றி கூறினார்.