உடுமலை:
தமிழகத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும், பெரும்பாலான மாவட்டங்களுக்கு திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள 70 விதை சுத்தி நிலையங்களில் பல்வேறு ரக நெல் விதைகள் உற்பத்தி செய்து விதை சுத்தி உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இப்பகுதிகளில், விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து வயல்களில் விதைப்பண்ணைகள் அமைத்து, கலவன்கள் இல்லாமல் அதிக முளைப்புத்திறன், மகசூல் கிடைக்கும் வகையில், விதை நிறுவனங்கள் பல்வேறு ரக நெல் விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது குறுவை சாகுபடி துவங்க உள்ள நிலையில், விதை சுத்தி நிலையங்களில் 18 ஆயிரத்து 518 டன் விதை நெல் விதைகள் தயாராகியுள்ளது.மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள பாப்பான்குளம் அரசு விதைப்பண்ணை மற்றும் துங்காவி, கணியூர், கொழுமம் பகுதியிலுள்ள தனியார் விதை சுத்தி நிலையங்களில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
ஆய்வில், விதை சுத்தி நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் வயல் மட்ட விதைக்குவியல்கள், சுத்தி செய்யப்பட்ட நெல் விதைக்குவியல்கள், சான்று செய்யப்பட்ட நெல் விதைக்குவியல்கள் மற்றும் விதை சுத்தி நிலைய பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து உதவி இயக்குனர்கூறியதாவது:-
தமிழக நெல் சாகுபடிக்கு தேவையான பெரும்பகுதி, நெல் விதை, திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. விதை சுத்தி நிலையங்களில் தொடர் ஆய்வு செய்து, தரமான விதை உற்பத்தியை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஆய்வின் போது வயல்மட்ட விதைகளை எக்காரணம் கொண்டும், சேதமடைந்த கோணிப்பைகளில் இருப்பு வைக்கக்கூடாது.ஈய வில்லைகள், விதை குவியல் குறித்த விபர அட்டைகள் அனைத்து, கோணிப்பைகளிலும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஈரப்பதம் பரிசோதித்த பின்னரே, வயல் மட்ட விதை இருப்பு வைக்க வேண்டும். ஒரு ரகத்தின் சுத்தி பணி முடிந்தபின், விதை சுத்தி நிலைய இயந்திரங்களை நன்கு சுத்தப்படுத்திய பின்னர்அதற்குரிய ரக சல்லடை பொருத்திய பிறகு, சுத்தி செய்ய வேண்டும்.
சுத்தி செய்யப்பட்ட நெல் விதைக்குவியல்களில் மிதவை சதவீதம், 3 சதவீதத்திற்கு மிகாமலும், கலவன்கள் சதவீதம்ஆதார நிலை விதைகளுக்கு, 0.05 சதவீதம், சான்று விதை குவியல்களுக்கு 0.2 சதவீதம், ஈரப்பதம் 13 சதவீதத்திற்கு மிகாமலும், விதைகளின் முளைப்புத்திறன் 80 சதவீதத்திற்கும் மேல் இருக்குமாறு, மிகுந்த கவனமுடன் விதை சுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.சான்று செய்யப்பட்ட நெல் விதைக்குவியல்கள், 30 கிலோ சிப்பத்தில், தமிழ்நாடு சான்று செய்யப்பட்ட விதைகள் என்று முத்திரையிடப்பட்டு சான்றட்டைகள், உற்பத்தியாளர் அட்டைகள் கையெழுத்திட்டு, ஈய வில்லைகள் பொருத்தப்பட்டு சான்று பணி மேற்கொள்ளவேண்டும்.
அவ்வாறு மேற்கொள்ளாத விதை சுத்தி நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.விதை சுத்தி நிலையங்களில் வரும் குறுவை மற்றும் சம்பா சாகுபடியை கருத்தில் கொண்டு, குறுவை பருவத்திற்குரிய குறுகிய கால நெல் ரகங்களான ஏடிடி 36, ஏடிடி 37, ஏடிடி 42, ஏடிடி 43, ஏடிடி,45, ஏஎஸ்டி 16, சிஓ 51, டிபிஎஸ் 5 உள்ளிட்ட ரகங்கள், இம்மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்திற்குள் தயார் செய்ய வேண்டும்.
சம்பா பருவத்திற்கு தேவையான மத்திம மற்றும் நீண்ட கால ரகங்களான, ஏடிடி 38, ஏடிடி 39, ஏடிடி 46, சிஓ 43, வெள்ளை பொன்னி, டிகேஎம் 13, சாவித்திரி, சிஆர் 1009, எஸ்யுபி 1, ஆர்.என்.ஆர்.,15048 உள்ளிட்ட ரகங்களை ஆகஸ்டு மாதத்திற்குள் விவசாயிகளுக்கு வினியோகிக்கும் வகையில் தயார் செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு தரமான விதைகள் குறித்த நேரத்தில் சென்று சேருவதை உறுதி செய்ய விதை சான்று அலுவலர்கள், அரசு மற்றும் தனியார் நெல் விதை உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்தெரிவித்தார்.