திருப்பூர்:
திருப்பூரில் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பணியிடமாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் என்று மாநகராட்சி மேயரிடம் மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி மேயராகப் பொறுப்பேற்றுள்ள என்.தினேஷ்குமாரிடம் மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் ஆ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
திருப்பூர் வடக்கு அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட 24 நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சட்டவிரோதமாக பணியிடமாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் கடை ஊழியர்கள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி முதல் மார்ச் 4&ந் தேதி வரை பணிக்குச் செல்லாததுடன், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பணியிட மாறுதல்களானது சங்க நிர்வாகிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எடுத்துள்ளனர்.
ஆகவே, செட்டிபாளையம் கூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியிடமாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.