திருப்பூர்:
திருப்பூர் நகைக்கடை கொள்ளை சம்பவம் நடந்ததாக தகவல் தெரிந்த 4-ந் தேதி காலை 9 மணி முதல் மாநகர போலீசார் விரைந்து செயல்பட ஆரம்பித்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு, தனிப்படையினருக்கு அடுத்தடுத்து துரிதமாக ஆலோசனைகளை வழங்கினார்.
சம்பவம் நடந்த நகைக்கடைக்கு நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டார். அங்குள்ள தடயங்களை சேகரித்ததுடன், 20க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அது பற்றி உயர் அதிகாரிகளுக்கும் தகவலையும் தெரிவித்தார்.
கொள்ளை சம்பவம் நடந்த கடை பகுதியில் இருந்து கொள்ளையர்கள் எந்த வழியாக சென்றிருக்கலாம் என்று ஆய்வு செய்தார். அப்போது கொள்ளையர்கள் நகைக்கடையில் கொள்ளையடித்த நகை, பணத்தை மூட்டைக்கட்டிக்கொண்டு சாவகாசமாக திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு நடந்தே சென்றுள்ளது தெரியவந்தது.
ரெயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்ட போது கொள்ளையர்களின் உருவம் பதிவாகியிருந்ததுடன், அவர்கள் சென்னைக்கு தப்பி செல்லவே, உடனே சென்னை மாநகரபோலீசார் மற்றும் ரெயில்வே போலீசாரை கமிஷனர் ஏ.ஜி.பாபு உஷார்படுத்தினார். தனிப்படை போலீசாரையும் உடனே சென்னைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து அப்பணியை கண்காணித்து வந்தார்.
இந்தநிலையில் கொள்ளையர்கள் சென்னையில் இருந்து பீகாருக்கு தப்பி செல்லும் போது ரெயில்வே போலீசார் மூலம் 4பேரும் பிடிபட்டனர். நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபுவே நேரடியாக களமிறங்கியதுடன், தனிப்படை போலீசாருக்கு வழங்கிய ஆலோசனைகள் மூலம் கொள்ளையர்கள் இரண்டே நாளில் சிக்கியுள்ளனர்.
இதையடுத்து கமிஷனர் ஏ.ஜி.பாபுவுக்கும், தனிப்படை போலீசாருக்கும் திருப்பூர் மாநகர பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாநகரில் கடந்த ஒரு மாதமாக கொலை, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்டசம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தது.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை தோறும் 3 கொலை சம்பவங்கள் நடைபெற்றது. அசாம் பெண்ணை சூட்கேசில் அடைத்து வீசப்பட்ட சம்பவத்தில் அந்த பெண்ணை கொன்ற கணவரின் நண்பரை உடனே கைது செய்தனர். கணவரை தேடி வருகின்றனர்.
அதேப்போல் வாலிபர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கமிஷனர் ஏ.ஜி.பாபு போலீசாருக்கு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். சோதனையையும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி போலீசார் மாநகர் பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபுவும் நேரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் நகைக்கடையில் கொள்ளை சம்பவம் நடக்கவே, அதில் ஈடுபட்ட கொள்ளையர்களை மடக்கி பிடித்துள்ளனர். திருப்பூர் மாநகரில் குற்றசம்பவங்கள் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
எனவே போலீசார் சோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதே நேரம் குற்றசம்பவங்களில் குற்றவாளிகளை போலீசார் உடனுக்குடன் கைது செய்து வருவது பொதுமக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. எனவே கமிஷனர் மற்றும் போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.