கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

ராக்கியாபாளையத்தில் உயர்மட்ட பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

நல்லாற்றின் இடையே ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால், நல்லாற்றில் ஓரளவு தண்ணீர் வழிந்தோடியது.

அவிநாசி:

கோவை மாவட்டம், அன்னூரில் இருந்து நொய்யல் ஆற்றின் இணை நதியாக நல்லாறு உருவாகி அவிநாசி ஒன்றியம், ராமநாதபுரம், கருவலூர், நம்பியாம்பாளையம். செம்பியநல்லூர் ஊராட்சி வழியாக அவிநாசி பேரூராட்சி பகுதியை கடந்து அணைப்புதூர், திருமுருகன்பூண்டி வழியாக திருப்பூர் சென்று நொய்யல் ஆற்றில் சங்கமிக்கிறது.

நல்லாற்றின் இடையே ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால், நல்லாற்றில் ஓரளவு தண்ணீர் வழிந்தோடியது. சில நாட்களுக்கு முன் பெய்த மழையில், தண்ணீர் அதிக அளவில் வழிந்தோடுகிறது. அணைப்புதூர் பகுதியில் தடுப்பணை நிரம்பி, உபரிநீர் அங்குள்ள குட்டையில் ததும்பி நிற்கிறது. 

அதில் இருந்து வெளியேறும் தண்ணீர், அணைப்புதூரில் இருந்து ராக்கியாபாளையம் செல்லும் சாலையில் உள்ள தரைமட்ட பாலத்தின் மேல் வழிந்தோடுகிறது. ராக்கியாபாளையம் செல்லும் பிரதான வழித்தடமான இங்கு, பெருமழை பெய்து வெள்ளப்பெருக்கு அதிகமானால், பயணிக்க முடியாது. எனவே, ‘இங்கு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் ‘என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நல்லாற்றில் வழிந்தோடி தடுப்பணைகளில் ஆங்காங்கே உள்ள குளம், குட்டை, தேங்கி நிற்கும் தண்ணீர், நிறம் மாறி, பாசி படிந்து, பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. குப்பைகளும் அதில் நிரம்பியுள்ளன. நல்லாறு ஒட்டியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதும், ஓடையை ஒட்டியுள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் கடைகளில் இருந்து வீசியெறியப்படும் குப்பை, பாலிதீன் கழிவுகளும்தான் நீர் மாசுபட காரணம் என கூறப்படுகிறது.