கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

உடுமலை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

காட்டுத்தீ பரவினால் காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, முயல், உடும்பு, காட்டுப்பூனை, மண்ணுளிபாம்பு உள்ளிட்டஉயிரினங்கள் தீயில் கருகி உயிரிழக்கும்.

மாலை மலர்

மடத்துக்குளம்:

திருப்பூர் மாவட்ட வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனச்சரகங்களில் காப்புக்காடுகள்,பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மற்றும் திறந்தவெளிக்காடுகள் உள்ளன. இதில் காப்புக்காடுகளுக்குள் நுழைய  மக்களுக்கு தடை உள்ளது.

அதேசமயம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழையும் சில விஷமிகள் சிறு விலங்குகளை வேட்டையாடி வரும் நிலையில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள புற்கள் மற்றும் மரங்கள், காய்ந்து வருகின்றன. இனிவரும் நாட்களில் காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளது. எனவே இதைத்தடுக்க வனத்துறையால் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:

காட்டுத்தீ பரவினால் காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, முயல், உடும்பு, காட்டுப்பூனை, மண்ணுளிபாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் தீயில் கருகி உயிரிழக்கும். வனப்பகுதியில் பயணிக்கும் போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதையும், சிகரெட் புகைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

எரியும் தீக்குச்சி, புகையும் சிகரெட் துண்டை வனப்பகுதியில் வீசக்கூடாது. இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.