திருப்பூர்;
திருப்பூரில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) மற்றும் பவர்டேபிள் உரிமையாளர் சங்கம் இடையே பவர்டேபிள் கட்டண உயர்வு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் 23-ந்தேதி இருதரப்பினரும் நேருக்குநேர் முதல்சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தநிலையில் இருதரப்பினரிடையே 2-வது சுற்று பேச்சுவார்த்தை திருப்பூர் ஹார்வி ரோடு ‘சிட்கோ’ வளாகத்தில் உள்ள சைமா’அரங்கில் நடந்தது.
பவர்டேபிள் தரப்பினர் தையல் நூல் விலை, கோன் ஒன்றுக்கு 6 முதல் 7 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. டெய்லர் உட்பட தொழிலாளர் சம்பளம் உயர்ந்துள்ளது. இடைக்கால ஒப்பந்தத்தில், டஜன் ஒன்றுக்கு தையல் கட்டணம் 6 ரூபாய் வழங்கப்பட்டது.
புதிய ஒப்பந்தத்தில் நடப்பு ஆண்டு 30 சதவீதம், அடுத்த 3 ஆண்டுகள் தலா 15 சதவீதம் என மொத்தம் 75 சதவீத கட்டண உயர்வு வழங்க வேண்டும். முதல் ஆண்டில் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில் இடைக்கால ஒப்பந்தப்படி வழங்கப்பட்டுவரும் டஜனுக்கு 6 ரூபாய் கழித்து மீதி தொகை வழங்க வேண்டும் என்றனர்.
சைமா தரப்பினர் நூல் விலை உயர்வால் ஆடை உற்பத்தி துறை நிறுவனங்கள் சிரமப்பட்டு வருகின்றன. பல்வேறு காரணங்களால் எங்கள் சங்க முக்கிய நிர்வாகிகளால் பங்கேற்க முடியவில்லை.
சங்கத்தில் அங்கம்வகிக்கும், உள்நாட்டு ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனத்தினரை அழைத்து பேசுகிறோம். அதன்பின் 3-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ‘சைமா’ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டதையடுத்து வரும் பிப்ரவரியில் 3-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.