கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

சர்வர் பிரச்சினையால் பாதிக்கும் தபால் சேவை

வாரத்திற்கு 2 முதல் 3 நாட்கள் நெட்வொர்க் பிரச்சினை என்று கூறி பொதுமக்களை திருப்பி அனுப்பிவிடுகிறார்கள்.

மாலை மலர்

திருப்பூர்:

சேமிப்பு கணக்கு, மாதாந்திர வைப்புதிட்டம், வருங்கால வைப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகிய கணக்குகளில் எண்ணற்ற வாடிக்கையாளர்கள், தபால் நிலைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தவிர கடிதம் மற்றும் பார்சல் போக்குவரத்து, மணி ஆர்டர், ஸ்பீடு போஸ்ட் உள்ளிட்ட சேவைகளும் உள்ளன.

இந்தநிலையில் கணினி சர்வர் சரியாக வேலை செய்யாததால் தபால் சேவைகள் பெற முடியாமல் திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சர்வர் வேலை செய்யாததால்  விரைவு தபால்களை அனுப்புவது மட்டுமின்றி சேமிப்பு திட்ட கணக்குகளில் பணம் செலுத்த முடியவில்லை. 

வாரத்திற்கு 2 முதல் 3 நாட்கள் நெட்வொர்க் பிரச்சினை என்று கூறி பொதுமக்களை திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். தினமும் இந்த அலுவலகத்திற்கு மணியார்டர் அனுப்புவதற்கும், பதிவு தபால் அனுப்புவதற்கும், சேமிப்பு கணக்கில் பணம் கட்டுவதற்கும் பொதுமக்கள் பலர் வருகின்றனர்.

இப்படி நெட்வொர்க் பிரச்சினை காரணமாக மணிக்கணக்கில் நின்று பின்பு திரும்பி செல்கின்றனர். இதனால் அலைச்சல் ஏற்படுவதுடன் அரை நாள் வேலை இழப்பு ஏற்படுகிறது என்கின்றனர்.

தபால் நிலைய அதிகாரிகள் கூறுகையில்:

சர்வர் பிரச்சினையால் அனைத்து பரிவர்த்தனைகளும் பாதித்தன. கடந்த சில நாட்களாக நாடுமுழுவதும் இப்பிரச்சினை உள்ளது. உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.