திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தது முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கான போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி நடந்தது. அதில் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 990 குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கப்பட்டது. 7,610 குழந்தைகள் விடுபட்டிருந்தனர்.
விடுபட்ட குழந்தைகள் மற்றும் சொட்டு மருந்து குடிக்காத பிற மாவட்டங்களை சேர்ந்த, திருப்பூர் வசிக்கும் குழந்தைகளை கண்டறியும் பணி பிப்ரவரி 28-ந்தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரை நடந்தது.
கிராம சுகாதார செவிலியர்கள், நகர்நல மையங்களில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் வீடுவீடாக சென்று சொட்டு மருந்து வழங்கினர். அதன் பயனாக மாவட்டத்தில் சொட்டு மருந்து பருகிய குழந்தைகள் எண்ணிக்கை 2 லட்சத்து 7 ஆயிரத்து 056 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது இலக்கை தாண்டி கூடுதலாக 8,456 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் சொட்டு மருந்து வழங்கல் 104 சதவீதமாக உயர்ந்துள்ளது.