தாராபுரத்தில் நடைபெற்ற முகாமை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

போலியோ சொட்டு மருந்து முகாம்

27 நடமாடும் குழுக்கள் மூலமாகவும், பேருந்து நிலையங்கள் மற்றும் புகை வண்டி நிலையங்களில் 23 குழுக்களும் அமைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

மாலை மலர்

திருப்பூர்:

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நாடு முழுவதும் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் 1154 மையங்களில் நடைபெற்றது.  அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரெயில்  நிலையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் சொட்டு மருந்து முகாம் மையங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

27 நடமாடும் குழுக்கள் மூலமாகவும், பேருந்து நிலையங்கள் மற்றும் புகை வண்டி நிலையங்களில் 23 குழுக்களும் அமைத்து  குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.  இப்பணிக்காக பல்வேறு துறைகளை  சார்ந்த 4666 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2.21  லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. தாராபுரம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற முகாமில்  தமிழக ஆதிதிராவிடர்  நலத்துறை அமைச்சர்  கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு போலியோ சொட்டு முகாமை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.வி., செந்தில்குமார் , நகர   செயலாளர் கே .எஸ்.தனசேகர் ,ரோட்டரி நகர தலைவர் கதிரவன் பழனிச்சாமி ,மருத்துவர் தேன்மொழி, தாராபுரம் சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், அருண்குமார், செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற முகாமை கலெக்டர் வினீத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகரில் நடைபெற்ற முகாமை மாநகராட்சி ஆணையர்  கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.