பின்னலாடை தொழிலாளர்களுக்கு காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

‘காவல் உதவி’ செல்போன் செயலி குறித்து போலீசார் விழிப்புணர்வு

அவசர உதவிக்கு போலீசாரை அழைக்கும் போது, உடனடியாக கேமரா ஆன் செய்யப்பட்டு, சம்பவ இடத்தில், 15 வினாடி வீடியோ பதியப்பட்டு, உடனடியாக போலீசாருக்கு செல்லும்.

மாலை மலர்

திருப்பூர்:

காவல் துறையை நவீனப்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அவசர காலத்தில் போலீ சாரிடம் உதவியை நாடும் வகையில் பல்வேறு செயலிகள், கட்டுப்பாட்டு அறை போன்றவை உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு 60 சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய ‘காவல் உதவி’ செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் செயல்பாடு குறித்து டி.ஜி.பி., சைலேந்திர பாபு விளக்க மளித்து, வீடியோ வெளியிட்டார். 

அதில் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது, எப்படி இயங்குகிறது, என்னென்ன சேவை உள்ளது உள்ளிட்ட அனைத்தையும் கூறினார். தற்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

திருப்பூர் மாநகர பகுதி மற்றும் புறநகர் போலீசார், புதிய செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வது, பயன்படுத்துவது, சிறப்பு அம்சங்கள் குறித்து நிலையம் வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

போலீசாரின் உதவியை பொதுமக்கள், பெண்கள் உடனடியாக பெறும் வகையில், ‘செல்போனில் நேரடி புகார்களை தெரிவிக்க ‘டயல் 100’ என்ற ஆப், ‘காவல் உதவி’ செயலியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அழைக்கும் போது, அவர்களின் விவரம், தற்போதைய இருப்பிட விபரம் அறியப்படும்.

அவசர உதவிக்கு போலீசாரை அழைக்கும் போது, உடனடியாக கேமரா ஆன் செய்யப்பட்டு, சம்பவ இடத்தில், 15 வினாடி வீடியோ பதியப்பட்டு, உடனடியாக போலீசாருக்கு செல்லும். அதன் பின் போலீசார் உங்களை தொடர்பு கொள்வர்.

உங்கள் இருப்பிடத்தை தெரியும் வகையில், போலீசார் மற்றும் நீங்கள் பதிவு செய்யப்பட்ட உங்களுக்கு வேண்டியவர்களின் செல்போன் எண்களுக்கு ‘லொக் கேசன்’ பகிரப்படும்.

வெளியூருக்கு சென்றிருக்கும்போது, அவசர உதவிக்கு செயலியை தொடர்பு கொண்டால், உங்களுக்கு அருகே உள்ளே போலீஸ் நிலையம் உள்ளிட்ட விபரம் தெரியும். தீயணைப்பு உள்ளிட்ட பிற சேவைகளின் எண்களும் இணைக்கப்பட்டுள்ளது.

‘சைபர் கிரைம்‘ குற்றம் தொடர்பாக போலீஸ் நிலையங்களுக்கு செல்லாமல், இந்த செயலி வழியாக உடனடியாக புகார் தெரி விக்கலாம். போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்தால், அதற்கான அபராதத்தை இந்த செயலி வழியாக செலுத்தலாம்.  

பொதுமக்கள் அளித்த, அளிக்கும் புகார்களின் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களுக்கு காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் மோகன், நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் விவேக்குமார் ஆகியோர் செயலி குறித்து விளக்கம் அளித்தனர்.