திருப்பூர்:
திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது பொடாரம்பாளையம். அப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவு எரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்ததால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டது. நச்சுப்புகை வெளியேறியதால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
பெருமாநல்லூர் பொதுமக்கள் சார்பில் ஒன்றிய பா.ஜ.க.நிர்வாகிகள், பிரச்சினைக்குரிய தொழிற்சாலையை மூட வேண்டுமென கலெக்டரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். தொழிற்சாலையை ஆய்வுக்கு உட்படுத்தி பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவித்த ஆலையை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தங்கள் கோரிக்கையை ஏற்று பிரச்சினைக்குரிய தொழிற்சாலையை மூடிய மாவட்ட நிர்வாகத்துக்கு, பா.ஜ.க., நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
பா.ஜ.க., வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், துணை தலைவர் நடராஜன், வடக்கு ஒன்றிய தலைவர் ஜெகதீசன், பூண்டி மண்டல தலைவர் சண்முகபாபு, ஒன்றிய பொது செயலாளர் குமார், ஊராட்சி பொறுப்பாளர் யோகேஸ்வரன் உள்ளிட்டோர் கலெக்டர் வினீத்தை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.