வெள்ளக்கோவில்:
வெள்ளக்கோவில் பகுதியில் சொந்த இல்லாத வீடு நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத்தலைவர் ச.கருப்பையா தலைமையில் காங்கயம் தாசிலதார் கனிமொழியிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா, வெள்ளக்கோவில் ஒன்றியம் உப்புப்பாளையம் பகுதியில் கடந்த 2007-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 61 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இதில் சொந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டதாகக் கூறி, உப்புப்பாளையம் கிழக்கு மற்றும் அதற்கு அருகே உள்ள குட்டக்காட்டுப்புதூர் ஆகிய பகுதியில் வசிக்கும் சொந்த வீடு இல்லாத மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து 2008-ம் ஆண்டு காங்கயம் தனி தாசில்தார் நேரடியாக ஆய்வு மேற்கொண்டதில் 20 பேர் சொந்தமாக வீடு வைத்திருந்ததுடன் போலியான ஆவணங்கள் மூலம் இலவச வீட்டுமனை பட்டா பெற்றது தெரியவந்தது. இதன் பின்னர் அந்த 20 பேரின் பட்டா ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காலியாக உள்ள 20 வீட்டுமனை பட்டாக்களை சொந்த வீடு இல்லாமல், வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த உப்புப்பாளையம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 20 பேருக்கு வழங்க வேண்டும் என கடந்த 13 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே காலி இடத்துக்கு அருகே உள்ள வேலம்பாளையம், காட்டுப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மேற்கண்ட இடத்தை ஆக்கிரமித்து, குடிசைகளை அமைத்துள்ளனர்.
எனவே, இப்பிரச்சினையில் காங்கயம் தாசில்தார் நேரடியாக விசாரணை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி காலியாக உள்ள 20 வீட்டுமனைகளை உப்புப்பாளையம் கிழக்கு மற்றும் அதற்கு அருகே உள்ள குட்டக்காட்டுப்புதூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சொந்த வீடு இல்லாத பட்டியலின மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.