திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு சராசரியாக 600ஐ எட்டியுள்ளது. இந்தநிலையில் நேற்று சற்று குறைந்து 605 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து 3-வது நாளாக 600-ஐ தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகி வருவது மாவட்ட நிர்வாகத்தை கவலையடைய செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த 3 நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது மாவட்ட மக்களை அச்சம் அடைய செய்துள்ளது. இருப்பினும் முககவசம் அணியாமல் பொதுமக்கள் வீதியில் நடமாடுவது அதிகமாகியுள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்து 3 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 256 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 743 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 237 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு பலி இல்லை. இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 1,031 ஆக உள்ளது.
இந்தநிலையில் காய்ச்சலின் தன்மை தீவிரமாக இல்லாததால் கிராமங்களில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்த வார்டுகளில் இதுவரை நோயாளிகள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் சமுதாயக்கூடம் உள்ளிட்ட இடங்களில் 5 முதல், 10 படுக்கைகளை உள்ளடக்கி தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது.மேலும் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு பரிசோதனையில் தொற்று உறுதியான லேசான அறிகுறியுடன் கூடிய நோயாளிகளை அனுமதிக்கவே திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாத நோயாளிகளும் இங்கு சிகிச்சை பெறலாம். ஆனால் இதுவரை எவரும் இந்த தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்படவில்லை.
இதுகுறித்து ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது:
கிராமங்கள்தோறும், கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிவதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளனர். உரிய வழிகாட்டுதல்களை மக்கள் பலரும் பின்பற்றுவதால் நோய் பாதிப்பு தீவிரமடையாமல் உள்ளது.
இதுவரை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் எவரும் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் எவரேனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்புறங்களில் சுகாதாரப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.