கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

உடுமலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

பெற்றோருடன் இரு சக்கர வாகனங்களில் செல்லும், மாணவ, மாணவிகளின் நிலைமையும் பரிதாபமாகிறது.

மாலை மலர்

உடுமலை:

உடுமலை கபூர்கான் வீதியில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. பஸ்  நிலையத்தில் இருந்து  ரெயில் நிலையம்  வழியாக நகரிலிருந்து தெற்குப்பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும்  இந்த  சாலையிலேயே   செல்ல வேண்டும்.

இந்தநிலையில் ரெயில் நிலையம் பஸ் நிறுத்தம் முதல் ராமசாமி நகர் ரெயில்வே கேட் வரை  உழவர் சந்தை அமைந்துள்ள கபூர்கான் ரோடு காணாமல் போகும் அளவுக்கு  தற்போது ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.

உழவர் சந்தையிலிருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு சாலையின்   இருபுறங்களிலும், காய்கறி கடைகள் அமைப்பதுடன் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும்  நடமாடும் விற்பனை வாகனங்களை தாறுமாறாக நிறுத்திக்கொள்கின்றனர்.

இதனால் உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வருபவர்கள் வாகனங்களை எங்கே நிறுத்துவது என தெரியாமல் திண்டாடுகின்றனர்.அங்கு கடையினரும்  நெடுஞ்சாலைத்துறைக்குரிய இடத்தை ஆக்கிரமித்து தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துகின்றனர்.

இந்த நெரிசலில், தத்தளித்தபடி  பிற வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடிவதில்லை.  வாகன ஓட்டிகள் மீண்டும் ரெயில் நிலையம் பஸ் நிறுத்தம்  வழியாக வேறு சாலைக்கு செல்லும் அவல நிலை உள்ளது. அதிகாலை முதல் காலை9  மணி வரை இந்நிலையே நீடிக்கிறது.

இதனால் பள்ளிக்கு செல்லும் வாகனங்கள் நெரிசலில் சிக்குகிறது. பெற்றோருடன் இரு சக்கர வாகனங்களில் செல்லும், மாணவ, மாணவிகளின்  நிலைமையும் பரிதாபமாகிறது.

ஆக்கிரமிப்பு கடைகளால் உழவர் சந்தையிலும் வியாபாரம் பாதிக்கிறது. எனவே  நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, போக்குவரத்து போலீஸ் இணைந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.