திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி தேர்தல் வரும் 19-ந்தேதி நடக்கிறது.வெற்றி பெற உள்ள கவுன்சிலர் மற்றும் தேர்வு செய்யப்பட உள்ள மேயர், மாநகர மேம்பாட்டுக்கு எத்தகைய பணிகளை செய்ய வேண்டும் என்று பின்னலாடை தொழில்துறையினர் தங்கள் கருத்துகளை தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்கள் வேதனை அளிக்கிறது.
வெற்றிபெற்று பதவிக்கு வந்தபின் முதலீடு செய்ததைப்போல் பல மடங்கு தொகையை எடுக்கத்தானே இவர்கள் முற்படுவர்? நகர வளர்ச்சி, தொழில் வளர்ச்சியில் எந்தளவு அக்கறை காட்டுவர்? மக்கள் நல திட்டங்களை வகுப்பார்களா என்பது கேள்விக்குறிதான். விளையாட்டு மைதானம் இல்லாதது, மிகப்பெரிய குறையாக உள்ளது.
திருப்பூர் மாநகர பகுதியில் வெளி விளையாட்டு அரங்கம் அமைத்தால் ஏராளமான தடகள வீரர்களை உருவாக்கலாம். பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூர் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கேற்ப சாலை, உயர் மட்ட பாலம், தொழிலாளர் குடியிருப்பு போன்ற கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.
மேயர் மற்றும் கவுன்சிலர்கள், சுயநலமற்றவர்களாக மக்கள் பணி செய்யவேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இந்த நகரையும், தொழிலையும் மேலும் வளர்ச்சி பெற செய்ய வேண்டும்.
திருப்பூரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் முடிந்த உடனேயே, அடுத்த கட்ட மேம்பாட்டு பணிகளை வகுத்து செயல்படுத்தவேண்டும். உயர் மட்ட பாலங்கள் கட்டவேண்டும்.
தொழில் நிமித்தமாக தினம் ஏராளமானோர் கோவையிலிருந்து திருப்பூர் வந்துசெல்கின்றனர். திருப்பூர் மாணவர்கள் உயர்கல்விக்காகவும், நோயாளிகள் உயர் சிகிச்சைகளுக்காக கோவை சென்று வருகின்றனர்.
திருப்பூரில் அவிநாசி ரோடு, பல்லடம் ரோட்டுக்கு இடைப்பட்ட பகுதியிலிருந்து கோவையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் தயாரிக்க வேண்டும்.
இதன் மூலம் தொழிலாளர், மாணவர்கள், நோயாளிகள் ஏராளமானோர் பயன்பெறுவர் என்றனர்.