கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

மா சாகுபடியில் பூ, பிஞ்சு உதிர்வதை தடுக்கும் வழிமுறைகள் - தோட்டக்கலைத்துறை விளக்கம்

ஒரு மரத்தின் பிஞ்சு மற்றும் பூ உதிர்வது, மரத்தின் வயது, காய்க்கும் பருவம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது.

மாலை மலர்

மடத்துக்குளம்:

உடுமலை வட்டாரத்தில் சின்னகுமாரபாளையம், கொங்குரார்குட்டை, தளி உட்பட பல்வேறு பகுதிகளில் மா சாகுபடி அதிக அளவு உள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு பிறகு மா மரங்களில், பூ பூத்து, பிஞ்சு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இப்பருவத்தில் சில மரங்களில் அதிக அளவிலான பூக்கள் மற்றும் மா பிஞ்சுகள் உதிர்கின்றன.

இதற்கான காரணங்கள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். 

இதுகுறித்து அத்துறையினர் கூறியதாவது: 

ஒரு மரத்தின் பிஞ்சு மற்றும் பூ உதிர்வது, மரத்தின் வயது, காய்க்கும் பருவம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. சரியான முறையில் கருத்தரிக்காத பிஞ்சுகள் உதிர்ந்து விடுகின்றன. அதிக வெயிலும், காற்றின் ஈரப்பதமும், பிஞ்சுகள் உதிர்வதற்கு காரணமாகிறது.

பூக்கள் பூக்கும் நேரத்தில், பாய்ச்சும் தண்ணீரின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ, பிஞ்சுகள் உதிரும்.பூக்கள் பிஞ்சு பிடிக்கும் நேரத்தில் தேவையான உரம் கிடைக்காததாலும் பாதிப்பு ஏற்படுகிறது. பூக்கள் மற்றும் பிஞ்சுகள் அதிக அளவில் உதிர்வதால் சாகுபடி குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

மாமரங்கள் பூ பூக்கும் சமயத்தில் 3 வாரங்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். தோட்டத்து மண் 3 செ.மீ., ஆழத்துக்கு காய்ந்த பின் நீர் பாய்ச்சினால் போதும். மாந்தோப்பை சுற்றிலும் காற்று தடுப்பான் மரங்களை வைத்து பராமரித்தால், காற்றினால் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்வதை தடுக்கலாம். சவுக்கு போன்ற மரக்கன்றுகளை அதிக அளவில் நட்டு காற்று அதிகளவில் படாமல் பாதுகாக்கலாம்.

உரம் அனைத்தும் சம அளவில் வைக்க வேண்டும். குறிப்பாக, மக்னீசியம் மற்றும் கால்சியம் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும். பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி, பூக்கள் பிஞ்சு பிடித்ததற்கு பிறகே பரிந்துரைக்கப்பட்ட மருந்தை அடிக்க வேண்டும். இதனால் மகரந்த சேர்க்கை பாதிக்காமல் இருக்கும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால், சாகுபடியில் அதிக விளைச்சல் பெற முடியும். இவ்வாறு தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.