கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

ஆர்டர் இழப்பு - மூலப்பொருட்கள் விலை உயர்வால் தத்தளிக்கும் சாய ஆலைகள்

நுால் விலை உயர்வால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆர்டர் வருகை குறைந்துள்ளது.

மாலை மலர்

திருப்பூர்:

பருத்தி பஞ்சு, நுால் விலை உயர்வு எதிரொலியாக, திருப்பூரில் பின்னலாடை துறை சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்கள் படிப்படியாக பாதிக்கப்பட்டு வருகின்றன. பின்னல் துணிகளுக்கு சாயமேற்றும் சாய ஆலைகள், ஆர்டர் இழப்பு, சாயம் உட்பட மூலப்பொருட்கள், விறகு, நிலக்கரி போன்ற எரிபொருட்கள் விலை உயர்வால் தத்தளிக்கின்றன.

இதுகுறித்து சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் கூறியதாவது:-

நுால் விலை உயர்வால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆர்டர் வருகை குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக சாய ஆலைகளும் பெரும் ஆர்டர் இழப்பை சந்தித்து வருகின்றன. 

சாய ஆலைகள் 40 சதவீத அளவிலேயே இயங்குகின்றன. நாளொன்றுக்கு 5 டன் துணிக்கு சாயமேற்றும் ஆலைகள், தற்போது 1 டன் என்கிற சிறிய அளவிலான ஆர்டர் வந்தாலும் கூட கையாளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் லாபம் இழப்பு மட்டுமின்றி நஷ்டத்தையும் சந்திக்க நேரிடுகிறது.

வழக்கமாக மழைக்காலத்தில் உயரும் விறகு விலை, வெயில் காலத்திலும் டன் 5,600 ரூபாயை எட்டியுள்ளது. பொது சுத்திகரிப்பு மையங்களின் இயக்கத்துக்கு தேவையான நிலக்கரி டன் ரூ.12 ஆயிரமாக உயர்ந்துவிட்டது.

50 கிலோ கொண்ட சோடா ஆசிட் மூட்டை ரூ. 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவது, வேதனையை இன்னும் கூட்டுகிறது. சாய ஆலை தொழிலாளர்களுக்கு முழு அளவில் வேலை வழங்க முடியவில்லை. எப்போது வேண்டுமானாலும் தொழில் இயல்புநிலைக்கு திரும்பலாம். அப்போது தொழிலாளரின்றி தவிக்க நேரிடும்.

எனவே சாய ஆலை இயக்கம் குறைந்தாலும்கூட, சாப்பாடு உட்பட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தொழிலாளரை தக்கவைத்து வருகிறோம். பொது கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை நிறுவி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் திருப்பூர் சாய ஆலைகள் இயங்குகின்றன.

இந்நிலையில் சொற்ப லாபத்துக்காக சில ஆடை உற்பத்தியாளர்கள் தேனி, மதுரை, ஈரோடு, நாமக்கல், பெங்களூருவில் இயங்கும் முறைகேடு சாய ஆலைகளுக்கு ஆர்டர் வழங்குவது கவலை அளிக்கிறது. தற்போதைய சூழலில் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் ஆர்டர்கள், திருப்பூர் சாய ஆலைகளுக்கு கிடைத்தால் கூட ஓரளவு சிறப்பாக இயங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.