திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் தி.மு.க., கூட்டணி, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க.,உள்ளிட்ட கட்சிகள் தனித்தும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகளின்படி பிரசாரத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் நேற்று திருப்பூரில் பிரசாரம் செய்தார். மேலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வருகிற 14-ந்தேதி திருப்பூரில் அ.தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
அதே நாளில் திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பிரசாரம் செய்கிறார். வருகிற 14-ந்தேதி மாலை 4 மணிக்கு இந்த காணொளி பிரசாரம் நடைபெறவுள்ளது.
இதை திருப்பூரில் ஒளிபரப்பும் வகையில் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வரவுள்ளார். வரும் 16 அல்லது 18 ஆகிய தேதிகளில் ஒரு நாள் அவரது பிரசாரம் நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது தவிர தே.மு.தி.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரேமலதா அல்லது விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 16-ந் தேதி பிரேமலதா கோவையில் பிரசாரம் செய்யவுள்ளதால் அனேகமாக அதே நாளில் திருப்பூர் வர வாய்ப்புள்ளது.
பா.ம.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அன்புமணி வருகை தர வாய்ப்புள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். அ.ம.மு.க., சார்பில் தினகரன் தேர்தல் பிரசாரம் செய்ய திருப்பூர் வரலாம். கட்சி தலைமையில் இதற்கான தேதி கேட்கப்பட்டுள்ளது.
வார்டுகளில் வேட்பாளர்கள் மும்முரமாக பிரசாரம் செய்து வரும் நிலையி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டால் கட்சி தொண்டர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தும் என நிர்வாகிகள் கருதுகின்றனர். அவ்வகையில் தலைவர்கள் பிரசார வருகையை ஆர்வத்துடன் எதிர் நோக்கியுள்ளனர்.