பல்லடம்:
வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதலின்படி பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகளை பின்பற்றி அனைத்து கட்சியினர் போலீசாருக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விதிமுறைகளை மீறி யாரேனும் செயல்பட்டால் பாரபட்சமின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் தேர்தல் நடவடிக்கை விதிமுறைகள் குறித்து அனைத்துக் கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் தரப்பில் வேட்பாளருக்கான காவல்துறை நன்னடத்தை சான்றிதழ் இணையதளம் மூலமாக பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து விளக்கமளித்த துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் இணையதளம் வாயிலாக கிடைக்காவிட்டால் பல்லடம் காவல் நிலையத்தில் நேரில் சென்று மனு அளித்து பெற்றுக் கொள்ளலாம். நன்னடத்தை சான்றிதழ் உடனடியாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், பல்லடம் நகராட்சி நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.