உடுமலை:
உடுமலை பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும் புளிய மரங்கள் ஏராளமாக உள்ளன. புளி சீசன் தொடங்கியுள்ள நிலையில் குத்தகைதாரர்கள் அந்த மரங்களில் இருந்து புளிஅறுவடை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தொழிலாளர்கள் மரங்களின் கிளைகளில் அமர்ந்து பழங்களை உலுக்கி கீழே விழ வைக்கின்றனர்.
இதை தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பொறுக்கி பைகளில் சேகரிக்கின்றனர். வாகன போக்குவரத்துஉள்ள சாலையில் தொழிலாளர்கள் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் புளியை அறுவடை செய்யும் பணியில் ஈடுபடுவது விபத்துக்கு வழிவகுக்கும் என பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதுமான அளவில் இருந்தது. இதனால் இந்த ஆண்டு புளி விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளது. கொட்டையுடன் கூடிய புளி ஒரு கிலோ ரூபாய் 50 க்கும் குறைவாக விற்பனை ஆகிறது. சாலை ஓரம் உள்ள மரங்களில் பலவும் போதிய பராமரிப்பு இல்லாததால் மரங்கள் காய்ந்து உடைந்து படிப்படியாக வீணாகி வருகிறது.
இதனால் நூறாண்டு கடந்தும் பலன் தரக்கூடிய புளியமரங்கள் பலவும் சேதம் அடையும் நிலையில் உள்ளது. எனவே குத்தகைதாரர் மூலம் மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.