திருப்பூர்:
கொரோனா தொற்று வேகமெடுத்த போது, திருப்பூர் அரசு மருத்துவமனையில் 2 தளங்களில் 100 படுக்கைகளுடன் அவசர சிகிச்சைக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. இவற்றில்ஒவ்வொரு படுக்கைக்கும் பிரத்யேகமாக ஆக்சிஜன் ஏற்பாடு செய்யப்பட்டது.
வார்டு வெளிப்புறத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்தாண்டு தொற்று பாதிப்பு அதிகரித்த போது இந்த வார்டு நிரம்பி வழிந்தது. இடப்பற்றாக்குறையால் வெளியே மரத்தடியிலும் படுக்கை அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்நிலையில் தொற்று குறைந்ததால் நடப்பாண்டு துவக்கத்தில், வார்டு அறைகள் மூடப்பட்டது. தற்போது வடமாநிலங்களை தொடர்ந்து, சென்னையிலும் தொற்று பாதிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளதால், திருப்பூரில் உள்ள தலைமை மருத்துவமனை கொரோனா வார்டு திறக்கப்பட்டது. 10 பேர் அடங்கிய சுகாதார ஊழியர்கள் மூலம் வார்டுகளை துாய்மைப்படுத்தும் பணி துவங்கியது.
ஆங்காங்கே கிடந்த படுக்கை, ஆக்சிஜன் சிலிண்டர், மருத்துவ உபகரணங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டது. பழுதான படுக்கைகள் ஓரங்கட்டப்பட்டு, கட்டில்கள் போடப்பட்டு வருகிறது. தலைமை அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், 'தமிழக சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி கொரோனா வார்டு துாய்மைப்படுத்தப்படுகிறது.
ஒரு வாரமாக யாருக்கும் திருப்பூரில் தொற்று உறுதியாகவில்லை. முன்னேற்பாடாக வார்டு தயார்படுத்தப்படுகிறது. டாக்டர், செவிலியர், பணியாளர் குழு நியமிப்பது குறித்து ஆலோசித்து அதன்பின் முடிவெடுக்கப்படும் என்றனர்.