கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளின் வருகை அதிகரிப்பு

உடுமலை ஒன்றிய அங்கன்வாடி மையங்களில் வழக்கம்போல் முன்பருவ கல்வி துவக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளது.

உடுமலை:

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள், பள்ளிக்கு செல்லும் வகையில் மனதளவில் தயார்படுத்துவதற்காக முன்பருவக் கல்வி அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான முன்பருவ கல்வி தடைபட்டது. தற்போதைய சூழலில் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் முழு அளவில் அங்கன்வாடி மையங்களும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

உடுமலை ஒன்றியத்தில் 143 அங்கன்வாடி மையங்களில் வழக்கம்போல் முன்பருவ கல்வி தொடங்கப்பட்டுள்ளது. பணியாளர்களும் காலை 8:30 முதல் 4 மணி வரை குழந்தைகள் முறையாக பராமரித்தும் வருகின்றனர். இதனால் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் விட்டுச்செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். 

குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:

திட்ட பணியாளர்களுக்கு, ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி அளித்தல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி குழந்தைகள் மீது தனி கவனம் செலுத்தி பராமரிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு மதியம் பரிந்துரைப்படி ஊட்டச்சத்து உணவு அளிக்கப்படுகிறது. அதன்படி உடுமலை ஒன்றியத்தில் 2550 குழந்தைகள், முன்பருவ கல்வி திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.