திருப்பூர்:
பின்னலாடை தொழில் வளர்ச்சியால் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநில தொழிலாளர்கள் வேலை தேடி திருப்பூர் நோக்கி வருகின்றனர்.
பின்னலாடை தொழில் சார்ந்து மட்டும் திருப்பூரில் 8 லட்சம் தொழிலாளர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். தொழிலாளர் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்ட பூண்டி ரிங் ரோட்டில் இந்து அறநிலையத்துறையிடமிருந்து, 7.5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு 2012-ல் சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டது.
கோர்ட்டு வழக்கு காரணமாக மருத்துவமனை கட்டப்படவில்லை. கடந்த 2019 பிப்ரவரி 10-ந்தேதி திருப்பூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த பிரதமர் மோடி, இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.
ஆனாலும் மருத்துவமனை கட்டுமான பணி துவங்கப்படாதது தொழிலாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது ரூ.81.34 கோடி மதிப்பில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டும் பணி தொடங்கியுள்ளது.
மத்திய பொதுப்பணித்துறையிடம் டெண்டர் பெற்றுள்ள டெல்லியை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் கட்டுமான பணியை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கட்டுமான பொருட்கள் இருப்பு அறை, கட்டுமான பொருட்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வகம், கட்டுமான தொழிலாளர் தங்கும் அறை, பொறியாளர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மருத்துவமனை கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தரை தளத்துடன் சேர்த்து மொத்தம் மூன்று தளங்களில், 100 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை மருத்துவ பணியாளர்களுக்காக தங்க 32 குடியிருப்பு கட்டப்படுகின்றன. தார் சாலை, குடிநீர், கேன்டீன் உட்பட அனைத்து அடிப்படை வசதிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம், ‘சி.சி.டி.வி.’ கேமரா கண்காணிப்பு கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
வரும் 2023 மார்ச் மாதத்துக்குள் கட்டுமான பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும்போது திருப்பூர் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ., மருத்துவமனையை நாடி கோவை செல்ல வேண்டியதில்லை.
இ.எஸ்.ஐ., உயர் சிகிச்சைகள், உள்ளூரிலேயே விரைவாகவும், எளிதாகவும் கிடைக்கும். 10 ஆண்டுகால எதிர்பார்ப்பு நிறைவேறவுள்ளதால் திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களும், ஆடை உற்பத்தி துறையினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.