திருப்பூர்:
திருப்பூர் பட்டயக்கணக்காளர் சங்கம் சார்பில் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பட்டயக் கணக்கு வகுப்புகள் குறித்த வழிகாட்டு கருத்தரங்கம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி வரவேற்றார்.
இதில் ஆடிட்டர் சங்க வழிகாட்டி கவுன்சில் தலைவர் செல்வராஜ் பேசியதாவது:
ஆடிட்டர் படிப்பில் சிறப்பாக படித்தால் வாழ்வில் உயர் நிலையை அடைய முடியும். ஆடிட்டர் படிப்பு மூன்று நிலைகளை உள்ளடக்கியது. பிளஸ் 2 முடித்தோர், ஆரம்ப நிலையிலும், பட்டப்படிப்பு முடித்தோர் நேரடியாக இடைநிலையிலும் இணையலாம். பயிற்சி மையங்கள் உள்ளன.
ஆடிட்டரிடம் இணைந்து பயிற்சி பெறலாம். மூன்று ஆண்டுகள் செயல்முறை பயிற்சி பெறவேண்டும். ஊக்கத்தொகை உண்டு. வருமான வரி, வணிக வரி கணக்கு தாக்கல், நிறுவனங்களின் கணக்கு தணிக்கை, திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்து நன்கு தெரிந்துகொள்ள முடியும். சி.ஏ., முடிப்போர், பெரிய நிறுவனங்களில் இணைந்து பணிபுரியலாம்; சுயமாக ஆடிட்டர் அலுவலகங்களை செயல்படுத்தலாம். இவ்வாறு அவர் பேசினார்.
சி.ஏ., படிப்பில் தொழில்நுட்பம் தொடர்பான கருத்துரைகளை ஆடிட்டர் விஷ்ணுகுமார் பேசினார். பள்ளியின் முன்னாள் மாணவர்களும், ஆடிட்டர்களுமான தருண், செல்வராஜ் இருவரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கவுன்சில் உறுப்பினர் மனோகரன், ஜெயப்பிரகாஷ் பங்கேற்றனர்.