கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

ஜி.பி.எஸ்., முறையில் கட்டிடங்கள் ஆய்வு- வரி விதிப்பு திருப்பூர் மாநகராட்சியில் அமல்ப்படுத்த திட்டம்

கட்டிடங்கள் மீதான சொத்து வரி வருவாய் பொது நிதியில் சேர்க்கப்படும். இதன்மூலம் நகரில் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும்.

மாலை மலர்

திருப்பூர்:

சமீபத்தில் அரசு அறிவித்தபடி திருப்பூர் மாநகராட்சியில் 25 முதல் 100 சதவீதம் வரை கட்டிடங்கள் மற்றும் காலியிடங்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த நிதியாண்டில் புதிய வரி உயர்வு அமலுக்கு வரவுள்ளது. உயர்த்தப்பட்ட வரி அடிப்படையில் வரி விதிப்புகளில் அதிகரிக்கும் வரி தொகையளவு குறிப்பிடும் வகையில், மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதற்காக மாநகராட்சியில் உள்ள ஏ, பி, சி ஆகிய 3 வித பிரிவுகளில் உள்ள வரி விதிப்பு இனங்கள் ஆய்வு செய்து மாற்றம் செய்யப்படவுள்ளது. 

இதுகுறித்து மாநகராட்சி வருவாய் பிரிவினருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு, வரி திருத்தங்கள் மேற்கொள்ள முன்னேற்பாடு நடக்கிறது. 

இதற்கான பயிற்சியும் விளக்கங்களும் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

கட்டிடங்கள் மீதான இந்த சொத்து வரி வருவாய் பொது நிதியில் சேர்க்கப்படும். 

இதன்மூலம் நகரில் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும். கடந்த நிதியாண்டில் சராசரியாக 60 சதவீதம் வரை மட்டுமே வரி வசூலாகியுள்ளது. 

சொத்து வரியில் 72 சதவீதம், காலியிட வரி 23 சதவீதம் என்ற அளவில் மட்டுமே பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள வரிகளை வசூலிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. 

பொதுமக்கள் தங்கள் வரியினங்களை முழுமையாக செலுத்தி மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

பட்ஜெட்டின் போது தெரிவித்தவாறு வருவாயைப் பெருக்கும் வகையில், இதுவரை வரி விதிப்பு செய்யப்படாத மற்றும் குறைந்த வரி விதிப்பு செய்யப்பட்டுள்ள கட்டிடங்கள் நேரில் ஆய்வு செய்யப்பட்டு உரிய வரி விதிப்பு செய்யப்படும். 

இதற்கான முயற்சியாக முதல் கட்டமாக தொழில்துறை அமைப்புகளிடம் பேசி  தொழிற்சாலை கட்டிடங்களுக்கான வரி விதிப்பு முறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் நேரடியாக பகுதி வாரியாக இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு இதை முறைப்படுத்தும் வகையிலும் வருவாய் பிரிவினருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் சில மாநகராட்சிகளில் ஜி.பி.எஸ்.,(புவியிடங்காட்டி) முறையில் கட்டிடங்கள் ஆய்வு செய்து வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து நேரில் சென்று பார்வையிட்டு திருப்பூரில் இந்த நடைமுறை பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணி துவங்கும். இதுபோன்ற முயற்சிகள் மூலம் நிர்வாகத்துக்கு உரிய வரியினங்கள் முழுமையாக ஏற்படுத்தப்படும். இவற்றில் ஏற்படும் முறைகேடுகளும் தவிர்க்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.