அவிநாசி:
மத்திய அரசை கண்டித்து மார்ச் 28, 29-ந்தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக 28-ந்தேதி ரெயில் மறியல் போராட்டமும், 29-ந்தேதி ஆர்ப்பாட்டமும் நடக்க உள்ளது.
போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு திருப்பூர் தொழிற்சங்க நிர்வாகிகள், ஓட்டல் உரிமையாளர் சங்கம், மளிகை கடைகள் வியாபாரிகள் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் வியாபாரிகளை சந்தித்தனர். சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எம்.எல்.எப்., எல்.பி.எப்., தொழிற்சங்க நிர்வாகிகள், வியாபாரிகளிடம் கடிதம் கொடுத்து ஆதரவு திரட்டினர்.
அவிநாசி சி.ஐ.டி.யு., தலைமை அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28, 29ந் தேதிகளில், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுக்க வேலை நிறுத்தம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவு திரட்டும் வகையில் வரும், 23-ந் தேதி முதல், 26-ந் தேதி வரை அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்களை சந்தித்து போராட்ட விளக்க நோட்டீஸ் வழங்குவது, வரும், 28-ந் தேதி, அவிநாசி தபால் நிலையம் முன் மறியல், 29-ந்தேதி திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் ஈஸ்வரமூர்த்தி, பழனிசாமி, ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகி இசாக், செல்வராஜ், எல்.பி.எப்., நிர்வாகி கணேசன், எம்.எல்.எப்., வட்டார தலைவர் பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.