பல்லடம் நகராட்சி 
உள்ளூர் செய்திகள்

பல்லடம் நகராட்சி தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க.வில் கடும் போட்டி

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற நகராட்சி தேர்தலில் தி.மு.க.,12 வார்டுகளையும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 1, - ம.தி.மு.க., 1 வார்டையும் கைப்பற்றின.

பல்லடம்:

பல்லடம் நகராட்சியானது கடந்த 1964 முதல் பேரூராட்சியாக இருந்து வந்த நிலையில் கடந்த 2004ல் 3-ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின்பு 2010ல் முதல் நிலை நகராட்சியானது. 18 வார்டுகள் 38,993 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்தநிலையில் பல்லடம் நகராட்சியான பிறகு 2001-ல் அ.தி.மு.க., 2006-ல் தி.மு.க., - 2011-ல் தே.மு.தி.க., என தலா ஒருமுறை கைப்பற்றியுள்ளன. இந்த முறை  இட ஒதுக்கீடு அடிப்படையில் பல்லடம் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற நகராட்சி தேர்தலில் தி.மு.க.,12 வார்டுகளையும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 1, - ம.தி.மு.க., 1 வார்டையும் கைப்பற்றின. பா.ஜ.க., 2, அ.தி.மு.க., 1, மற்றும் சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றனர்.இதனால்  பல்லடம் நகராட்சி தி.மு.க.,வசமானது.

பல்லடம் சட்டமன்ற தொகுதியை கடந்த 25 ஆண்டுகளாக தனது கோட்டையாகவே வைத்திருந்த அ.தி.மு.க. பல்லடம் நகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 1 வார்டில் மட்டுமே வெற்றி பெற்றது. 

அ.தி.மு.க.,வின் கோட்டையை தகர்த்து தி.மு.க. பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.

இந்தநிலையில் பல்லடம் நகராட்சியின் முதல் பெண் தலைவர் பதவியை அலங்கரிக்கப்போகும் நபர் யார் என்பது தெரியாமல் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

பல்லடம் தி.மு.க.,வில் நகர பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் நகராட்சி தலைவர் சேகர் தலைமையில் மற்றொரு அணியும் உள்ளன.இந்த இரு அணிகளும் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற தீவிரமாக உள்ளனர்.

சென்னையில் முகாமிட்டு இரு அணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தி.மு.க. பிரமுகர் ஒருவர் கூறியதாவது:-

ராஜேந்திரகுமாருக்கு 9 பேர் ஆதரவாளராக உள்ளனர். சேகர் அணிக்கு, அவரது மனைவி ருக்மணி  உள்பட 3 பேர் ஆதரவு மட்டுமே உள்ளது என்பதால்  ராஜேந்திரகுமார் அணி சார்பில் அவரது மனைவி கவிதாமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புஉள்ளது.

இருந்தபோதிலும்,முன்னாள் நகராட்சித் துணைத் தலைவர், நகராட்சி தலைவர் என்ற அனுபவங்கள் உள்ளதாலும், செல்வாக்கு மிக்கவர் என்பதாலும் சேகர் அணிக்கும் தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இருந்தாலும் தலைமை உத்தரவின்படியே தலைவர், துணை தலைவர் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால் இருவரில் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம்.தலைமை என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதற்கிடையே துணைத் தலைவர் பதவியை பிடிக்கவும் கடும் போட்டி நிலவுகிறது.

இதில் தி.மு.க., தரப்பில், 8-வது வார்டு உறுப்பினர் சுகன்யா, 2-வது வார்டு உறுப்பினர் ராஜசேகரன்,15-வது வார்டு உறுப்பினர் விஜயலட்சுமி, மற்றும் 6&வது வார்டில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈஸ்வரமூர்த்தி, உள்ளிட்டோர் துணைத் தலைவர் பதவியைப் பிடிக்க தீவிர முயற்சியில் உள்ளனர்.

இதனால் பல்லடம் மக்கள் நகராட்சி தேர்தல் முடிவை விட தலைவர், துணைத்தலைவர்  யார் என்பதை தெரிந்து கொள்ள பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.