கூட்டத்தில் பாசன சங்க தலைவர் விஸ்வநாதன் பேசிய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

உப்பாறு அணைக்கு அமராவதி தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் எதிர்ப்பு

அமராவதி நதியின் உபநதி உப்பாறு. உப்பாறில் வீணாகும் தண்ணீர் அமராவதியில் கலக்கிறது.

மாலை மலர்

தாராபுரம்:

தாராபுரம் அடுத்துள்ள சத்திரம் டி. பி. ஜி .திருமண மண்டபத்தில் உப்பாறு அணைக்கு புதிய அமராவதி பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் புதிய திட்டத்திற்கு விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் பி.ஏ.பி. செயற்பொறியாளர் கோபி தலைமையில் நடைபெற்றது

புதிய அமராவதி பாசன வாய்க்கால் சங்க தலைவர் புத்தூர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். பி.ஏ.பி எஸ். டி ஓ. காஞ்சி துரை,அமராவதி ஏ.இ., பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமராவதி பாசன விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனை பற்றிய விபரம் வருமாறு:

விஸ்வநாதன், ஒருங்கிணைந்த அமராவதி பாசன சங்க தலைவர் :

அமராவதி நதியின் உபநதி உப்பாறு. உப்பாறில் வீணாகும் தண்ணீர் அமராவதியில் கலக்கிறது. அமராவதி ஆற்றின் நீளம் 192 கிலோ மீட்டர். 25 தடுப்பணைகள், 55 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்றுள்ளது. மேலும் அமராவதி மூலம் வழிநெடுகிலும் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது .

உப்பாறு என்பது பொதுப்பணித்துறை ரெக்கார்டுகளில் கசிவு நீர் குட்டை ஆகவே உள்ளது. உப்பாறுக்கு பிஏபி. மூலம்தான் தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும். பிஏபி. பாசனத் திட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் காற்றறைகள் அமைக்கப்பட்டுள்ளது .

அதைக் கழித்து பாசன பகுதியை பார்க்கும் பொழுது பிஏபி. நான்காவது மண்டலத்தில் இருந்து உப்பாறு அணைக்கு தேவையான தண்ணீரை வழங்க இயலும். எனவே அமராவதி பாசனத்தில் இருந்து தண்ணீர் எடுக்க முயற்சியை கைவிட வேண்டும். இவ்வாறு விஸ்வநாதன் பேசினார். 

த.மா.கா. தாராபுரம் வட்டார தலைவர் காளிதாஸ் பேசியதாவது:

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் அமராவதி பாசன பழைய மற்றும் புதிய பாசன திட்டத்தில் பரப்பு 55ஆயிரம் ஏக்கர் ஆகும். குடிநீர் மற்றும் இரு பாசன பகுதிகள், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பயன்பாடு என ஆண்டிற்கு சுமார் 18.6 டிஎம்சி. அமராவதி ஆறு மூலம் தேவை தற்போது இருந்து வருகிறது.

உப்பாறுக்கு அமராவதி தண்ணீரைவழங்கும் பட்சத்தில் அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் ஏற்கனவே உள்ள பயிர் முறைக்கு உத்தரவாதம் வழங்கும் அம்சங்களை நிபந்தனைகளாக திட்டத்தில்  குறிப்பிட வேண்டும். மேலும் அமராவதி பாசன பகுதியில்18 ஆயிரம் ஏக்கரில் சான்று விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது .

எனவே அமராவதி பாசனத்திலிருந்து உபரி நீரை உப்பாறுக்கு வழங்குவோம் என்ற அரசின் கருத்துஅமராவதி விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். உப்பாறுக்கு தேவையான தண்ணீரை பிஏபி. பாசனம் மூலமாகவே வழங்க வேண்டும். பாசன விவசாயிகள் பிஏபி. பாசனத் திட்டத்தில் உள்ள உப்பாறுக்குதண்ணீர் வழங்குவதை எதிர்க்கும் போது அமராவதி பாசனத்தில் ஏற்கனவே தட்டுப்பாடு உள்ளதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு காளிதாஸ் பேசினார் .

தளவாய் பட்டினம் பழைய அமராவதி பாசன வாய்க்கால் சங்கத்தலைவர் சந்தானகிருஷ்ணன், அலங்கியம் அமராவதி பாசன சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தாராபுரம் அமராவதி பாசன சங்க தலைவர் முருகேசன், கொளிஞ்சிவாடி அமராவதி பாசன சங்க தலைவர் சக்தி செந்தில் ஆகியோர் இந்த ஆண்டு மட்டுமே அமராவதியில் உபரிநீர் வந்து உள்ளது. ஆனால் அந்த உபரி நீரும்கடலில் கலக்காமல் காவிரியில் தான் கலந்துள்ளது .

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இரு போக நெல் சாகுபடி முறை இருந்தது போய் தற்போது ஒரு போக நெல் சாகுபடி தான் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

உப்பாறுக்கு தண்ணீர் எடுக்கும்போது குடி தண்ணீருக்கு என்று எடுக்க வேண்டிய அவசிய சூழ்நிலை வரும்போது அமராவதி பாசன விவசாயிகள் பாசன  திட்டத்தில் தண்ணீர் குறைபாடு ஏற்பட்டு பயிர் கருகும் அபாயம் ஏற்படும் .எனவே அரசு அமராவதி பாசன விவசாயிகள் நலன் காக்க இத்திட்டத்தை கைவிட வேண்டும் .

இவ்வாறு இந்த பாசன சங்க தலைவர்கள் தனித்தனியே ஆட்சேபனை மனுவை அளித்தனர். தாராபுரம் யூனியன் சேர்மன் செந்தில்குமார் ,கொளத்துப்பாளையம் டவுன் பஞ்சாயத்து துணை தலைவர்  துரைசாமி ஆகியோர் அமராவதி பாசன பகுதி விவசாயிகள் பாதிக்கப்படாத வண்ணம் அமராவதி ஆற்றில் உபரி நீர் இருக்கும் காலங்களில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கலாம் என கருத்தை கூறினார்கள்.

கூட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட அமராவதி பாசன விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை மனுக்களாக அதிகாரியிடம் அளித்தனர். பிஏபி. பாசன உடுமலை செயற்பொறியாளர் கோபி பேசும்பொழுது, விவசாயிகள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அரசுக்கு தெரிவித்து தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி கூறினார் .