உடுமலை:
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தனிப்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறும் முயற்சியாக ஊடுபயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஊடுபயிர் சாகுபடியின் மூலம் களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன் பூச்சி தாக்குதலும் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பாகும்.
எந்தெந்த பயிரில் என்ன ஊடுபயிர் சாகுபடி செய்தால் நன்மை தரும் என்று வேளாண்மைத்துறையினர் வழிகாட்டியுள்ளனர். அந்தவகையில் கரும்பில் தக்கைப் பூண்டு சாகுபடி செய்வதன் மூலம் தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம். வெங்காயம் சாகுபடி செய்து இடைக்கணுப் புழுவைக் கட்டுப்படுத்தலாம்.
மக்காச்சோளம், நிலக்கடலையில் ஊடுபயிராக ஆமணக்கு சாகுபடி செய்து புரொடினியா புழுக்களை கட்டுப்படுத்தலாம். சோளம் பயிரிடுவதன் மூலம் குருத்து ஈ, தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
வெங்காயத்தில் வெட்டுப்புழுக்களைக்கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் ஆமணக்கு பயிரிடலாம். நெற்பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த தட்டைப்பயறு பயிரிடலாம். நிலக்கடலையில் கலப்புப்பயிராக கம்பு விதைத்து சுருள் பூச்சி, இலைப்பேன், அந்துப் பூச்சிகளைக்கட்டுக்குள் வைக்கலாம்.
இவ்வாறு பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் ஊடுபயிர் சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் உடுமலை பகுதியில் தென்னையில் ஊடுபயிராக மிளகாய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பிரதான பயிரான தென்னை காய்க்கத் தொடங்கும் முன் பலமுறை குறுகிய காலப்பயிரான காய்கறி சாகுபடி மூலம் வருவாய் ஈட்டி விடுகின்றனர். மேலும் தென்னையில் ஊடுபயிராக பாக்கு, தேக்கு, மிளகு, கோகோ உள்ளிட்ட பல்வேறு பயிர்களையும் சாகுபடி செய்து வருவாய் ஈட்டுகின்றனர்.
ஒற்றைப் பயிரை சாகுபடி செய்துவிட்டு போதிய விலை கிடைக்குமா? இல்லையா? என்று தவிக்கும் நிலைக்கு மாற்றாக ஊடுபயிர் சாகுபடி மூலம் மேற்கொள்ளப்படும் பலபயிர் சாகுபடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக்காப்பதாக உள்ளது.