கோப்புபடம் 
உள்ளூர் செய்திகள்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் முடங்கும் எலாஸ்டிக் உற்பத்தி

பஞ்சு மற்றும் நூல் விலை உயர், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி சங்கிலித்தொடரில் உள்ள அனைத்துவகை நிறுவனங்களையும் பாதிக்கச் செய்து வருகிறது.

திருப்பூர்:

பஞ்சு மற்றும் நூல் விலை உயர், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி சங்கிலித்தொடரில் உள்ள அனைத்துவகை நிறுவனங்களையும் பாதிக்கச் செய்து வருகிறது.

ஆடை தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஆர்டர் வருகை குறைவு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு, தொகை பெறுவதில் சிக்கல் என அடுக்கடுக்கான பிரச்னைகளால், திருப்பூரில் எலாஸ்டிக் உற்பத்தி துறையினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். எலாஸ்டிக் உற்பத்தியும் நாளொன்றுக்கு, 1.50 கோடி மீட்டராக குறைந்துள்ளது.

இதுகுறித்து எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது:

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால், எலாஸ்டிக் உற்பத்தி மூலப்பொருளான பாலியெஸ்டர் நூல் விலை அதிகரித்து வருகிறது. ஒன்றரை மாதங்களில் பாலியெஸ்டர் நூல் விலை கிலோவுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து எலாஸ்டிக் உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது.

ஒசைரி நூல் விலை உயர்வு, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆடை உற்பத்தியாளரிடமிருந்து எலாஸ்டிக் தயாரிப்புக்கு ஆர்டர் வருகை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. டீசல் விலை உயர்வால் ஜெனரேட்டர்களை இயக்க முடிவதில்லை. மின்தடை நாட்களில், எலாஸ்டிக் நிறுவனங்கள் முழுமையாக உற்பத்தியை நிறுத்திவிடுகின்றன.

தொழிலாளர்களை தக்கவைத்துக்கொள்வதற்காக, தினம் 8 மணி நேரம் மட்டும் எலாஸ்டிக் தயாரிப்பு நடக்கிறது. பல்வேறு இன்னல்களால், நாளொன்றுக்கு 4 கோடி மீட்டர் எலாஸ்டிக் தயாரிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது 1.50 கோடி மீட்டர் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

வழக்கமாக 30 முதல் 60 நாட்களில் எலாஸ்டிக்கிற்கான தொகையை வழங்கிய ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இப்போது 90 நாட்களுக்குமேல் இழுத்தடிக்கின்றன. அதனால் முதலீடுகள் பெருமளவு முடங்கிவிடுகிறது.

நெருக்கடியான இந்த சூழலை எதிர்கொள்வது குறித்தும் எலாஸ்டிக் உற்பத்தியை மேலும் குறைப்பது குறித்தும் அடுத்தவாரம் நடைபெறும் சங்க கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.