கோப்புபடம். 
உள்ளூர் செய்திகள்

டாக்டர்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்

எழுத்து வேலைகளை கவனிப்பது போன்ற பணிகளை கால்நடை ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் நிலையில் தற்போது அந்த வேலைகளையும் மருத்துவர்களே கவனிக்க வேண்டியுள்ளது.

மாலை மலர்

அவினாசி:

அவிநாசி, பல்லடம், பொங்கலூர், ஊத்துக்குளி, திருப்பூர் என 5 வட்டங்களை உள்ளடக்கி கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுகிறது. இப்பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதியான 1.25 லட்சம் மாடுகள் உள்ளன. ஆடு, கோழி, நாய் என 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பிராணிகள் உள்ளன.மொத்தம் 42 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன.

அவற்றில் தலா ஒரு கால்நடை மருத்துவர் வீதம்  42 பேர் இருக்க வேண்டும். அதே போன்று 42 உதவியாளர், 42 கால்நடை ஆய்வாளர் பணியிடம் நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் 35 கால்நடை மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். 14 உதவியாளர்கள், 7 ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களை வைத்துதான் கால்நடை பராமரிப்புத்துறை இயங்கி வருகிறது. 

இதனால் பணியில் உள்ள டாக்டர்கள், பணியிடம் காலியாக உள்ள மருத்துவமனையிலும் கூடுதல் பொறுப்பை கவனிக்க வேண்டியுள்ளது. 

மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் கால்நடைகளுக்கு சினை ஊசி செலுத்துவது, முதலுதவி செய்வது, அலுவலகம் சார்ந்த எழுத்து வேலைகளை கவனிப்பது போன்ற பணிகளை கால்நடை ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் நிலையில் தற்போது அந்த வேலைகளையும் மருத்துவர்களே கவனிக்க வேண்டியுள்ளது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறையினர் கூறுகையில், பணியாளர் பற்றாக்குறையால் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கூடுதல் பொறுப்பை கவனித்து வருவதால் சில நேரங்களில் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததது உள்ளிட்ட சில சேவை குறைபாடுகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. 

பொதுமக்கள் பலரும் இதுதொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட நிர்வாகம், கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறையினருக்கு தொடர்ந்து புகார் மனு அனுப்பி வருகின்றனர் என்றனர்.