திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிறுநீரகம் பாதித்தவர்களுக்கு, ‘டயாலிசிஸ்’ சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டோர் வாரம் 2 மற்றும் 3 நாள் கட்டாயம் ‘டயாலிசிஸ்’ செய்ய வேண்டியது கட்டாயம்.திருப்பூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி கிருஷ்ணசாமி(வயது 43). இவரால் நடக்க முடியாது.
இவரது மனைவி இந்திராணி, சிறுநீரகம் பாதிக்கப்பட்டு ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வாரம் 2 முறை டயாலிசிஸ் செய்து வந்தார். இவருக்கு கடந்த 21-ந் தேதி தொற்று கண்டறியப்பட்டது.
அதன்பின் மருத்துவமனையில் ‘டயாலிசிஸ்’ செய்ய முடியாது. ‘நெகடிவ்’ சான்று வேண்டுமென கூறி சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். 2 முறை ‘டயாலிசிஸ்’ செய்ய முடியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சக்ஷம் அமைப்பினரிடம் உதவி கோரியுள்ளனர். சக்ஷம் நிர்வாகிகள் கலெக்டரிடம் முறையிட்டு மீண்டும் ‘டயாலிசிஸ்’ செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
டயாலிசிஸ் சிகிச்சை பெறுவோர் கூறுகையில்:
கொரோனா தொற்று பாதித்தவர்கள் திருப்பூரில் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற முடிவதில்லை. தொற்று தணியும் வரை ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டுமென டாக்டர்கள் கூறுகின்றனர்.
கொரோனா பாதித்தவரும் தொடர்ந்து ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்‘’ என்றனர். கலெக்டர் வினீத்திடம் கேட்டபோது, தொற்று பாதித்தவர்களுக்கும் ‘டயாலிசிஸ்’ தடையின்றி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கமான நபர்களின் ‘டயாலிசிஸ்’ முடிந்த பின் கடைசியாக தொற்று பாதித்தவர்களுக்கு, ‘டயாலிசிஸ்’ செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.